×

கஜா புயல் நிவாரணத்துக்கு தொழிலதிபர்கள், பொதுமக்கள் இதுவரை 88 கோடி நிதி

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சரின்  பொது நிவாரண நிதிக்கு இதுவரை 88 கோடி வழங்கியுள்ளனர். கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டது. வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 19ம் தேதி பத்திரிகைகளின் வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் `கஜா’’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏற்கனவே 48 கோடியே 65 லட்சத்து 77 ஆயிரத்து 345 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை பலர் நிதி உதவி வழங்கினார்கள். அதன்படி, அமால்கமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி 1 கோடி, பி.எஸ்.ஜி. குழும நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் 1 கோடி, சாய் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கே.வி.ரமணி 1 கோடி, சவிதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்.எம்.வீரையன் 1 கோடி, கூட்டுறவு வங்கிகளின் சார்பில் பொது நல நிதியில் இருந்து 6 கோடி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் 2 கோடி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் 2 கோடி, சிப்காட் சி.எஸ்.ஆர். நிதியின் சார்பில் 3 கோடி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் 1 கோடி,

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் 1 கோடி, டி.வி.எஸ். & சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் தினேஷ் மற்றும் மதுரை-டி.வி.எஸ். டையர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷோபனா ராமச்சந்திரன் ஆகியோர் 1 கோடியே 16 லட்சம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி.முருகேசன் 1 கோடியே 57 லட்சத்து 44  ஆயிரத்து 529 ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.அத்துடன், பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை 87 கோடியே 88 லட்சத்து  62 ஆயிரத்து  791 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Industrialists ,civilians ,Gaza Storm , Gaza Storm, Businessmen, Public, Finance
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை