புதுடெல்லி: பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் இந்தியாவின் பொருளாதார நிலை கணிசமாக சரிவை சந்தித்தது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார நிலையை சமாளிக்கவும், மற்ற உலக நாடுகளுக்கு இணையாக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொருளாதார ஆலோசனைக்குழு ஒன்றை பிரதமர் மோடி அமைத்தார். இந்த குழுவின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினராக உள்ள பிபேக் தேவ்ராய் நியமிக்கப்பட்டார். மேலும், சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், அஷீமா கோயல் ஆகியோர் பொருளாதார குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக மொத்தம் ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர்.
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்குவது இந்த குழுவின் முதன்மை பணியாகும். இந்நிலையில், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்த சுர்ஜித் பல்லா, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து சுர்ஜித் பல்லா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து நான் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன், எனத் தெரிவித்துள்ளார். நேற்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்த நிலையில், தற்போது அடுத்தடுத்து பொருளாதார உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி