×

அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதையொட்டி நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11.30 .மணிக்கு மேள தாளம் முழங்க உற்சவர் அங்காளம்மனை கோவில் மண்டபத்திலிருந்து வடக்குவாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு சென்று ஊஞ்சலில் வைத்தனர். இதனை தொடர்ந்து கோவில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர். இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான  பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 12.15மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனை மீண்டும் கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர் இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், உதவி ஆணையர்கள் திருவண்ணாமலை மோகனசுந்தரம், விழுப்புரம் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் பிரகாஷ், கோவில் அறங்காவல் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை செல்வம் ரமேஷ் சரவணன் சேகர் மணி கோவில் ஆய்வாளர் அன்பழகன் மேனேஜர் மணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Annamalai ,swing festival ,devotees ,Sami , Villupuram, melmalaiyanur, Angalamman Temple, swing festival
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...