×

நெல் ஜெயராமன் மரணம் முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: நெல் ஜெயராமன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய ‘நெல்’ ஜெயராமன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ‘நமது நெல்லை காப்போம்’ என்ற இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து தமிழ்நாடு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, விவசாயிகள் அதனை பயிரிட்டு பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

அவரது மறைவு தமிழ்நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்: இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதற்கும் நெல் ஜெயராமன் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. பயன்பாட்டில் இல்லாத நெல் வகைகளை மீட்டெடுத்து அவற்றை அதிக அளவில் சாகுபடி செய்ய வைப்பதற்காக இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியவர். பல நெல் ரகங்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிர்க்கொல்லி நோய் அவரை நம்மிடமிருந்து இரக்கமில்லாமல் பிரித்திருக்கிறது.

இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் நெல் ஜெயராமன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜ தலைவர்): நெல் ஜெயராமன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. 50 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தன் வாழ்நாள் ஒவ்வொன்றையும் பயனுள்ளதாகவே வாழ்ந்திருக்கிறார். சுமார் 170 வகை பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்திருக்கிறார்.  இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அன்பையும், ஆதரவையும் பெற்றவர். இயற்கை விஞ்ஞானத்தை ஊக்கப்படுத்துவதும், பாரம்பரிய நெல் ரகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

நெல் ஜெயராமன் மறைவிற்கு பாஜ சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாழும் குடும்பத்தாருக்கும், விவசாய தோழர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன், மார்க்சிஸ்ட பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சமக தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் நெல் ஜெயராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Chief Minister ,leaders ,Nel Jayaraman , Nel jeyaraman death, chief minister, leaders, mourning
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...