×

மேகதாது உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை உடனே கூட்டுங்கள்: முதல்வர், சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேரில் வலியுறுத்தல்

சென்னை: மேகதாது உள்ளிட்ட பல பிரச்னைகள் தமிழகத்தில் இருக்கிறது. அதனால் உடனடியாக  சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வர் மற்றும் சபாநாயகரை நேரில்  சந்தித்து வலியுறுத்தினர்.தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எச்.வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், கணேஷ், காளிமுத்து ஆகியோர் நேற்று சென்னை, தலைமை  செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினர். அப்போது சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து இதே கோரிக்கையை  வலியுறுத்தினர்.பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கஜா புயலால் ஒரு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு செய்ய வேண்டும். ஆனால் இந்த புயலுக்கு பின்பு தமிழக அரசு அவர்களுக்கு இழப்பீடு  வழங்குவதை தாமதப்படுத்துகிறார்கள். இழப்பீடு தொகையின் அளவு மிக குறைவாக உள்ளது. அதை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

அதேபோல, கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் ஒரு புதிய அணையை கட்டுவதற்கு ஏற்பாடு செய்து, அதற்கு மத்திய அரசு முன்அனுமதியும் வழங்கி இருக்கிறது. அந்த அணை அங்கு கட்டப்பட்டால் நிச்சயமாக  தமிழகத்தின் ஒரு பகுதி மிக மோசமான நிலையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கை என்பது சட்டரீதியாக இருக்க வேண்டும். ஆணையம் என்ன தகவலை சொல்லி இருக்கிறது, இப்போது அங்கே எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள்  என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.அதேபோல, பல பிரச்னைகள் தமிழகத்தில் இருக்கிறது. இதுபோன்ற அவசர காலத்திலே செய்ய வேண்டிய பல வேலைகள் இன்றைக்கு செய்யப்படாமல் இருக்கிறது. அதற்காக உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க  வேண்டும் என்று கோரி இருக்கிறோம். அதற்கு பேரவை தலைவர், அதற்குரிய நடவடிக்கைகளை செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். முதல்வரும், சட்டமன்றத்தை கூட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்வதாகவும் சொல்லி  இருக்கிறார்.

இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்குகிறோம் என்று முதல்வரிடம் உறுதி அளித்துள்ளோம்.காவிரியில் தண்ணீர் வந்தால்தான் டெல்டா பகுதியில் விவசாயம் நடைபெறும். இது மாநிலத்துக்கு மாநிலம் நடக்கும் பிரச்னையாக காங்கிரஸ் பார்க்கவில்லை. தமிழகத்தில் உள்ள மக்களை காப்பாற்ற வேண்டும். இதற்கு  காங்கிரஸ் உதவியாக இருக்கும். இதற்கு தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது ஆணையத்தின் உத்தரவு நமக்கு சாதகமாக இருக்கிறது. தேவைப்பட்டால் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடக  காங்கிரஸ் முதல்வரையும் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Legislative Assembly ,Chief Minister ,Congress , Discuss, Congregate , Legislative Assembly,Congress MLAs, speaker
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரசை போல்...