×

பாலினம் கண்டறிய ரூ.6,000, கருக்கலைப்புக்கு ரூ.15,000 வசூல் பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் டாக்டர், கணவன் கைது: வீட்டின் ரகசிய அறையில் நடத்திய ஸ்கேன் சென்டருக்கு சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கருவில் பாலினம் கண்டறிய ரூ.6 ஆயிரம், கருக்கலைப்புக்கு ரூ.15 ஆயிரம் பெற்றுக்கொண்டு, வீட்டின் ரகசிய அறையில் நள்ளிரவில் செயல்பட்டு வந்த கருக்கலைப்பு மையத்திற்கு மருத்துவக்குழுவினர் அதிரடியாக சீல் வைத்தனர். இதுதொடர்பாக போலி பெண் டாக்டர், கணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக ஸ்கேன் கருவியை பயன்படுத்தி, பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக, சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்தது.

அதன்படி, பாலின தேர்வை தடைசெய்யும் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, மாநில கண்காணிப்பு குழுவை சேர்ந்த டிஎஸ்பி தாமஸ் பிரபாகர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு வந்தனர். சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வருபவர்களை கண்டறிய, கர்ப்பிணி ஒருவரிடம் ₹6 ஆயிரம் கொடுத்து சம்பந்தப்பட்ட மையத்தை தொடர்பு கொள்ள செய்தனர். அந்த மையத்தில் உள்ளவர்கள் கூறிய தகவலின்படி, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவரை அணுகினார். அவர் அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்.

வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்ட வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தி, கர்ப்பிணியை உள்ளே அழைத்து சென்றார். அங்கு தன்னை டாக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்ட பெண், கர்ப்பிணியை நவீன ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தை தெரிவித்தார். இதற்கான கட்டணமாக, ₹6 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார். இதற்கிடையில், ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த மருத்துவகுழுவினர், திடீரென அந்த வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் நவீன ஸ்கேன் கருவி, கருக்கலைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அந்த மையத்தை திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவை சேர்ந்த ஆனந்தி (50) என்பவர் நடத்தி வந்ததும், அவருக்கு உடந்தையாக சென்னை வீட்டுவசதி வாரியத்தில் உதவி பொறியாளராக உள்ள அவரது கணவர் தமிழ்ச்செல்வன்(52), செட்டிக்குளம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, சட்ட விரோதமாக பாலினத்தை தெரிவித்து, கருக்கலைப்பு செய்து வந்த ஆனந்தி உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில், லேப் டெக்னீஷியன் டிப்ளமோ முடித்துள்ள ஆனந்தி, பொன்னுசாமி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் டாக்டர் என்று கூறி நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதும், கர்ப்பிணிகளிடம் இருந்து பெறும் தொகையில் ₹4 ஆயிரத்தை ஆனந்தியும், ₹2 ஆயிரத்தை இடைத்தரகரான ஆட்டோ டிரைவர் சிவக்குமாரும் பங்கு போட்டுள்ளதும் தெரியவந்தது.

ஏற்கனவே கடந்த 2016ல் போலி ஸ்கேன் சென்டர் நடத்திய ஆனந்தி இதேபோன்ற செயலில் ஈடுபட்டு கைதாகி உள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் பாலினம் கண்டறிந்து சொல்வது, கருக்கலைப்பு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். கருவில் பாலினம் கண்டறிய ₹6 ஆயிரமும், கருக்கலைப்புக்கு ₹15 ஆயிரமும் வசூலித்து வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கருக்கலைப்பு மையமாக செயல்பட்டு வந்த வீட்டிற்கு அதிரடியாக சீல் வைத்தனர். திருவண்ணாமலையில் நள்ளிரவில் செயல்பட்டு வந்த கருக்கலைப்பு மையம் குறித்த தகவல் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வழி தெரியாமல் இருக்க ஊரை சுற்றி ஆட்டோவில் பயணம்
திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கருக்கலைப்பு மையத்திற்கு, கர்ப்பிணியை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர், மையம் செயல்படும் இடம் குறித்து எளிதில் புரிந்து கொள்ளாமல் இருக்க, திருவண்ணாமலை நகரின் சந்து பொந்துகளில் எல்லாம் சுற்றிச்சுற்றி அழைத்து சென்றுள்ளார். மேலும், மையத்திற்கு வரும் பெண்களிடம், நீங்கள் மறுமுறை வரவேண்டும் என்றால், இரவு நேரத்தில் தான் வரவேண்டும். தற்போது எப்படி வந்தீர்களோ, அப்படியே தான் வரவேண்டும் என ஆனந்தி கூறி வந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Females ,women , Gender detect,collections,abortion,women,fake female doctor,husband,arrested,house,scan
× RELATED தேர்தலில் போட்டியிடும்...