×

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் திரும்ப கிடைக்க எவ்வளவு வாக்கு பெற வேண்டும்?

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண்கள் 873 பேரும், பெண்கள் 77 பேரும் அடங்கும். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். சென்னையை பொறுத்தவரை வடசென்னையில் 35, தென்சென்னையில் 41, மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து வேட்பாளர்களும், யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்று பொதுமக்களும் ஆவலோடு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் சில அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு கூட டெபாசிட் கிடைக்காது என்று பலரும் கிண்டல் செய்யும் நிலை தற்போது உள்ளது.

அதனால், தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது டெபாசிட் வாங்கி விட வேண்டும் என்பதில் சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஜூன் 4ம் தேதியை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த வேட்பாளருக்கு டெபாசிட்டாவது கிடைக்குமா? என்று பலரும் பேசுவது தற்போது வாடிக்கையாக உள்ளது. பொதுவாக வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்குமா, டெபாசிட் பெற எவ்வளவு வாக்குகள் வாங்க வேண்டும்? என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்ன?

அதாவது, ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் தேர்தலில் போட்டியிட ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்திதான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இதில் எஸ்சி தொகுதி என்றால் வேட்பாளர்கள் ரூ.12,500 டெபாசிட் கட்ட வேண்டும். இது அரசியல் கட்சி வேட்பாளர், சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும். இந்த வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது, மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கு வாங்கினால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.

அதாவது, ஒரு தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் பதிவானது என்றால், ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்கு பெற்றால் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது. இதைத்தான் பொதுமக்கள் பலரும், இவர் இந்த தேர்தலில் டெபாசிட் வாங்குவாரா? என்று ஒருவருக்கொருவர் பேசி கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதன்படி பார்த்தால், தற்போதைய தேர்தலில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் அதிகபட்சம் 120 வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது.

* ஒரு தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் பதிவானது என்றால், ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்கு பெற்றால் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது.

The post தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் திரும்ப கிடைக்க எவ்வளவு வாக்கு பெற வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Karur ,Nagapattinam ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...