×

சாதி, மத அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?: சுஷ்மாவுக்கு ஜோதிராதித்யா பதிலடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பிரசாரம் செய்வதற்காக மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்யா சிந்தியா நேற்று ஜெய்ப்பூர் வந்தார். அவரிடம், ‘தேர்தல் நேரத்தில்தான் காங்கிரஸ்காரர்களுக்கு மதச்சார்பின்மை மறந்து விடுகிறது. சாதி, மதம் குறித்து பேச ஆரம்பித்து விடுகிறார்கள்’ என்று ‘மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதிலில், ‘‘காங்கிரஸ் எப்போதும் சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்ததில்லை. நாட்டின் ஒற்றுமை, சகிப்புதன்மைதான் காங்கிரசின் தாரகமந்திரம். இப்படிப்பட்ட அரசியல் செய்வது நாங்களா? நீங்களா? மதத்தை வைத்து அரசியல் செய்யும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம்தான் சுஷ்மா சுவராஜ் இந்த கேள்வியை கேட்க வேண்டும். எங்களுக்கு நாட்டின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம்’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘நான் ஜல்ராபடா (ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தையும், முதல்வருமான வசுந்தரா ராஜே போட்டியிடும் தொகுதி) தொகுதியிலும் கட்டாயம் பிரசாரம் செய்வேன். மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் டிச.11ம் தேதி ஆட்சி அமைக்கும். அப்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்படும்.’ என்றார்.

மோடி போவார் ராகுல் வருவார்
ராஜஸ்தானில் சம்பல் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் கோடா. ராஜஸ்தானின் மூன்றாவது பெரிய நகரம் இது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று, பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்தார். ‘‘நல்ல நாள் வரும் என்று பிரதமர் மோடி கூறிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரது ஆட்சிக்காலம் கூட முடியப் போகிறது. எங்குமே நல்ல நாள் வந்தது போன்று இல்லை. விரைவில் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசிடம் இருந்தும், மத்தியில் மோடியின் தலைமையிலான ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு விடிவுக்காலம் பிறக்கும். மோடிக்கு பதிலாக ராகுல் வருவார்’’ என்றார்.

விளம்பரத்தில் விநோதம்
ராஜஸ்தானில் பல மாவட்டங்களில் சுவர் விளம்பரம், தட்டிகள், போர்டுகள் என்று வேட்பாளர்களால் எதுவும் தனித்தனியாக வைக்கப்படவில்லை. இதனால், நகரங்கள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. ஆனால், இதற்கு மாறாக தனியார் நிறுவனங்கள் செய்வது போன்று விளம்பர போர்டுகளில் கட்சிகள் விளம்பரம் செய்துள்ளன.  இதற்காக மட்டும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை பொறுத்தவரையில் துண்டு பிரசுரங்கள் கொடுப்பது, கார்களில் நின்றபடி செல்வது என்பதுதான் இங்கு நடக்கிறது. அதுவும் 3 கார்கள்தான். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவதால், வேட்பாளர்களின் அத்துமீறல்கள்  சுத்தமாக இல்லை.

வெள்ளைக்காரனே மேல்
ராஜஸ்தான் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகிறது. இக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மாநிலத் தலைவர் தரம்வீர் சிங் அசோக் புறநகர் பகுதியில் செய்த பிரசாரத்தில், ‘ஆங்கிலேயர்கள் நம்மை 300 ஆண்டுகள் ஆண்டனர். ஆனால், அவர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தாலும், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருந்திருக்காது. கூறப்போனால் அவர்களின் நிலைமை மேம்பட்டிருக்கும். ஆனால், இப்போது தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மிக மோசமாகவே உள்ளது’’ என்று ஆதங்கப்பட்டார்.

சிங்கிளா கலக்கும் சிங்கம்
பீகாரின் துங்காப்பூரைச் சேர்ந்தவர் ராம்நாத். இவர் இந்திரா காந்தி காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் உள்ளார். தேர்தல் நேரங்களில் எந்த பிரதிபலனையோ, பணத்தையோ எதிர்பார்க்காமல், கட்சிக் கொடியையே ஆடையாக தைத்துக் கொண்டும், கையில் பிரமாண்ட காங்கிரஸ் கொடியை வைத்துக் கொண்டும், தேர்தல் நடக்கும் இடங்களில் சுற்றி வாக்கு சேகரிக்கிறார். இப்போது அவர் ஜெய்ப்பூருக்கு வந்து சந்த்போல் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது, ‘‘என் கட்சி ஆட்சிக்கு வரணும். அதுதான் என் ஒரே குறிக்கோள்’’ என்றார்.

மாற்றத்தை விரும்பும் தமிழர்கள்
ராஜஸ்தானில் தமிழ் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். தலைநகர் ஜெய்ப்பூர், கோடா, உதய்ப்பூர் போன்ற இடங்களில் பரவலாக இருக்கின்றனர். இவர்களிடம் ராஜஸ்தான் தேர்தல் நிலைமை குறித்து கேட்டபோது பெரும்பாலானவர்கள் மாற்றத்தை மட்டுமே எதிர்பார்ப்பதாக கூறினர்.

தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் குப்புசாமி: ராஜஸ்தானில் தமிழர்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ஆங்காங்கே வாழ்ந்து வருகிறோம். எங்களை பொருத்தவரையில் மாநிலத்தில் மாற்றம் வரும் என்றுதான் நினைக்கிறோம்.

தனியார் மருத்துவமனை அதிகாரி கார்த்திகை வேலன்: தமிழர்கள். தாங்கள் உண்டு. தங்கள் வேலையுண்டு என்று இருப்பார்கள். ஆனால், இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும்போது, மாநிலத்தில் பெரிய  மாற்றம் ஏற்படும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முருகானந்தம்: பாஜ.வை பொருத்தவரையில் வலிமையான தலைவராக முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளார். ஆனால், கட்சியில் உரிய தலைவர்கள் இல்லை.

ஜெய்ப்பூரில் விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பேட்டரி ரிக்சாவில் சென்றார். அவரை படமெடுக்க  நிறுத்தியபோது  மிரண்டு போய், ‘‘ஐயா… நான் எல்லா அனுமதியும் வாங்கிட்டேன்’’ என்று  அனைத்து  ஆவணங்களையும் காட்டினார்.

இல்லத்தரசியான சங்கீதா செந்தில் வேலன்: மோடியின் திட்டங்களுக்காகத்தான் இங்கு பாஜ.வுக்கு வாக்களிக்க உள்ளோம். மாநில அரசு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.

தனியார் நிறுவன ஊழியர் வி.கார்த்திகா: பாஜ ஆட்சியில் ஜெய்ப்பூரில் பாதுகாப்பாக வாழ்கிறோம். எனவே, அக்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sushma ,Jyotiraditya , Caste, religious, politics,Jyotiraditya replied,Sushma
× RELATED புதுடெல்லி மக்களவை தொகுதி பாஜ...