×

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தரமற்ற மின் கம்பங்கள்? டிடிவி.தினகரன் கடும் கண்டனம்

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தரமற்ற கான்கிரீட் மின் கம்பங்கள் பயன்படுத்தப்படுவதற்கு அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதமடைந்த லட்சக்கணக்கான மின் கம்பங்களுக்கு மாற்றாக தற்போது வாங்கப்பட்டுள்ள கான்கிரீட் மின் கம்பங்கள் தரமில்லாமல் இருப்பதை பத்திரிகை ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் கான்கிரீட் மின்கம்பங்களில் தரமற்ற இரும்பும், முறையான சிமென்ட் கலவையும் செய்யப்படாமலும், மின் கம்பங்கள் காய்வதற்கான மூன்று மாத கால அளவுக்கு பதிலாக இரண்டு மாத கால அளவே ஆன கம்பங்கள் வந்துள்ளதால் மன்னார்குடியில் மின் கம்பம் நடப்படும்போது கம்பத்தின் மேலே வேலைபார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சாரத்துறைக்கு 200 கோடி ரூபாய் மத்திய அரசு உடனடியாக வழங்கியிருக்கிறது என்று சொன்ன மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு, இப்படிப்பட்ட தரமற்ற கான்கிரீட் கம்பங்கள் வந்துள்ளதையும், அதனால் விபத்து ஏற்பட்டுள்ளதையும், ஏற்கனவே புதிதாக நடப்பட்டு வரும் மின் கம்பங்கள் எத்தனை உறுதி தன்மையோடு இருக்கிறது என்பன போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? இதுதொடர்பாக, துறை ரீதியான விசாரணை நடத்தி உடனடியாக இப்புகார் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவேண்டும். தொடர்ந்து அலட்சியமாகவும், மனசாட்சியற்ற முறையிலும் நடந்துகொள்ளும் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts , Electric poles, TTV.Dinagaran, condemned
× RELATED தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்