×

அமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் புஷ் மரணம்

ஹூஸ்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.  அமெரிக்காவின் 41வது அதிபராக இருந்தவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ். ‘சீனியர் புஷ்’ என்று அமெரிக்கர்களால் அன்போது அழைக்கப்பட்டவர். இவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவருக்கு வயது 94. பார்கின்சன் என்னும் நரம்பு தளர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த புஷ்சால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் சக்கர நாற்காலியில் தனது இறுதி காலத்தை கழித்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன் இவருடைய மனைவி பார்பரா இறந்தார். அப்போது, திடீரென ரத்த தொற்றால் பாதிக்கப்பட்ட புஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு பார்கின்சன் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று காலமானார்.

இவர் அமெரிக்க கடற்படையில் பணியாற்றியவர். 2ம் உலகப்போரின் போது  படைத் தளபதியாக இவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. கடந்த 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, 1989ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அதிபராக பொறுப்பேற்ற புஷ் ,1993 ஜனவரி 20ம் தேதி வரை அந்த பதவியில் இருந்தார். முன்னதாக ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது புஷ் துணை அதிபராக பணியாற்றினார். 1981 முதல் 1989ம் ஆண்டு வரை புஷ் இரண்டு முறை தொடர்ந்து துணை அதிபராக பதவி வகித்துள்ளார். இவருக்கு ஜார்ஜ் புஷ் உள்பட 5 பிள்ளைகள் உள்ளனர். இவரது மகன்களில் ஒருவரான ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் 43வது அதிபராக இருந்துள்ளார். சீனியர் புஷ்சின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

வளைகுடா போர் நாயகன்
கடந்த 1990ம் ஆண்டு சதாம் உசேன் உத்தரவின் பேரில் ஈராக் படைகள் அண்டை நாடான குவைத்தை ஆக்கிரமித்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த சீனியர் புஷ் அமெரிக்கா தலைமையில் 32 நாடுகளின் கூட்டுப்படையை உருவாக்கி தரைவழித் தாக்குதல் நடத்தி குவைத்தில் இருந்து ஈராக் படைகளை வெளியேற்றினார். இதனால், ‘வளைகுடா போர் கதாநாயகன்’ என்றும் இவரை அழைக்கிறார்கள்.

இந்திய பிரதமர் மோடி இரங்கல்
அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடியும், சீனியர் புஷ்சுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். டிவிட்டர் பதிவில், `சீனியர் புஷ்சை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் அமெரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உலக வரலாற்றில் மிக நெருக்கடியான காலக் கட்டத்தில் புஷ் ராஜதந்திரியாக செயல்பட்டுள்ளார். அவர் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பனிப்போருக்கு முடிவு கட்டியவர்’: கார்பச்சேவ் புகழாரம்
சீனியர் புஷ்சுக்கு முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிக்கைல் கோர்பச்சேவ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷ்யா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த ேபட்டியில், `புஷ்சுடன் இணைந்து பணியாற்றியதால் பல்வேறு மாற்றங்களை எங்களால் ஏற்படுத்த முடிந்தது. 1991ல் நானும் புஷ்சும் செய்து கொண்டு ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் மூலம் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனால், ரஷ்யா - அமெரிக்கா இடையே நடைபெற்று வந்த பனிப்போர் முடிவுக்கு வந்தது. இது புஷ்சின் வரலாற்று சாதனை. இதனால் அவரை உண்மையான நண்பர் என்று அழைக்கலாம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : George W. Bush ,death ,US , American ex-President, Senior Bush, died
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது