×

யோகி கிளப்பிய புயல் சூறாவளியாக மாறுகிறது அனுமன் எந்த ஜாதி? தலித்தா, பழங்குடியா? புதுப்புது கருத்துகளால் சர்ச்சை

புதுடெல்லி: ‘அனுமன் தலித் இனத்தை சேர்ந்தவர்’ என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிளப்பி விட்ட புயல், சூறாவளியாக மாறி வருகிறது. அவருக்கு போட்டியாக, ‘அனுமன் தலித் அல்ல... பழங்குடியினத்தை சேர்ந்தவர்’ என தேசிய பழங்குடி ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்காக, அம்மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 27ம் தேதி பிரசாரத்தின் போது பேசிய அவர், ‘‘கடவுள் அனுமன் வனவாசி, பின்தங்கிய மற்றும் தலித் வகுப்பை சேர்ந்தவர். இந்தியாவின் அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைக்க பாடுபடுபவர்’’ என்றார்.

இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தது. மேலும், ராஜஸ்தானின் வலதுசாரி அமைப்பு ஒன்று, தனது பேச்சுக்காக 3 நாளில் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியது.  இந்த நிலையில், உத்தர பிரதேச பாஜ.வை சேர்ந்த எம்எல்ஏ. ஒருவர், யோகியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘அனுமன் தலித் அல்ல; கடவுள்கள் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். அனுமன் எல்லா மக்களுக்குமான கடவுள்’ என்றார். இந்த சர்ச்சையே ஓயாத நிலையில், தேசிய பழங்குடி ஆணைய தலைவர் நந்த் குமார் சாய் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார். உ.பியின் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கடவுள் அனுமன் பற்றி நான் தெளிவுபடுத்துகிறேன். கடவுள் ராமரின் படையில் குரங்குகள், கரடி, கழுகுகள் இருந்தன. குருக் மொழி பேசும், ஒரான் பழங்குடியினர்கள் ’டிக்கா’ அதாவது வானரம் கோத்திரத்தை சேர்ந்தவர்கள். எனது சமூகமான கன்வார் பழங்குடியினர்கள் மத்தியில் ‘கிளான்’ அதாவது அனுமன் என்ற கோத்திரம் உள்ளது. இதே போல, ‘கிட்த்’ அதாவது கழுகு என்ற கோத்திரம் பல்வேறு பழங்குடியின சமூகத்தில் உள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது, ராமரின் படையில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். எனவே, அனுமனை பற்றி அரசியல் தலைவர்கள், குறிப்பாக முதல்வர்கள் பேசும் போது இந்த விஷயங்களை குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm storm ,Yogi ,Hanuman , Yogi Storm, Hanuman, Caste, Dalit, Tribal
× RELATED மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...