×

திமுக-விசிக கூட்டணி வலுவாக உள்ளது: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

ெசன்னை: திமுக-விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால் இடைவௌி இருப்பதுபோல சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் ஆகியோர் நேற்று பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர், திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, தோழமையான வழக்கமான சந்திப்பு. டிசம்பரில் நாங்கள் நடத்தும் மாநாடு, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி பேசினோம். திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடைவெளி இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு வதந்தியாக பரப்புகிறார்கள். துரைமுருகன் கூட்டணிக் கட்சி குறித்து கூறிய கருத்து எதார்த்தமானது. ஆனால் சிலர் அதை யூகங்கள் அடிப்படையில் வதந்தியாக பரப்புகிறார்கள்.

திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையேயான நட்பு மிகவும் இணக்கமாகவும் வலிமையாகவும் உள்ளது. ஒரு வாரம் முன்பே இந்த சந்திப்பை திட்டமிட்டு இருந்தோம். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து ஓரணியில் திரட்டி திமுக தலைமையில், தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்திய அளவில் சனாதன சக்திகள் மீண்டும் வலிமை பெறக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 10ம் தேதி நாங்கள் திருச்சியில் மாநாடு நடத்த உள்ளோம். இதில் திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மு.க.ஸ்டாலின் நிச்சயமாக பங்கேற்கிறார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை பலவீனப்படுத்தி வெளியே இழுத்து விடலாம் என்று சிலர் மனப்பால் குடிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான உறவு வலுவாக உள்ளது.

பின்னர் நிருபர்களின் கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்:
* துரைமுருகனுடன் பேசினீர்களா?
மகிழ்ச்சியுடன் பேசினோம்.
* உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்துமா?
தமிழக அரசு எந்த இடைத்தேர்தலையோ, உள்ளாட்சி தேர்தலையோ நடத்த தயாராக இல்லை. தேர்தல் தள்ளிப் போகவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
* காவிரியில் அணை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதே?
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக பிரதமரை சந்திக்க வேண்டும். இதனால் 2 மாநிலங்களுக்கிடையே பதற்றம் ஏற்படும் நிலை உருவாகும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,interview ,Visual Alliance ,Thirumavalavan ,MK Stalin , DMK, MK Stalin, Thirumavalavan,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி