×

கஜா புயல் வேட்டை ஓய்ந்து 11 நாளாகியும் அகற்றப்படாத மரங்கள்... மீளாத விளைநிலங்கள்...சீராகாத மின்சாரம்

புதுக்கோட்டை: கஜா புயல்  கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், முந்திரி மரங்கள், தைல மற்றும் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் ஒரே நேரத்தில் சரிந்து விழுந்ததால் மாவட்டம் முழுவதும் மின் துண்டிப்பால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதுக்கோட்டை நகரம் தவிர பெரும்பாலான கிராமங்கள் இன்னமும் இருளில் மூழ்கிய நிலையில் தான் உள்ளன.சரிந்து விழுந்த மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கம்பங்கள் நடும் பணியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் மட்டும் இன்றி, வெளி மாநிலமான கேரளாவில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களும் களத்தில் இறங்கி உள்ளனர்.

சாலை ஓரங்களில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆலங்குடி உள்பட பல பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் சோகத்தில் தான் சிக்கி தவிக்கிறார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம்  வத்தனா கோட்டை கிராமத்தில் உள்ள பல குடிசைகள் கஜா புயலால்  சேதம் அடைந்தன. மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டதால்  தார்ப்பாய் போட்டு மூடி அந்த குடிசை வாசிகள் அங்கேயே வசித்து வருகிறார்கள்.  தங்களுக்கு இதுவரை அரசின் நிவாரண உதவி எதுவும் கிடைக்கவில்லை. தார்ப்பாயை  கூட நாங்கள் கடையில் காசு கொடுத்து வாங்கி தான் போட்டு உள்ளோம் என்றனர். இதேபோல்  ஆலங்குடி, வடகாடு, கந்தர்வகோட்டை கறம்பக்குடி, பொன்னமராவதி, திருமயம் பகுதிகள் என மாவட்டத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீட்டை இழந்த மக்கள்் 10 நாட்களுக்கு மேலாகியும் சீரமைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருமயம் மற்றும் ஆதனக்கோட்டை ஊராட்சி மடத்துக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கஜா புயலால் கடுமையாக  பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் காற்றில்  அடித்து செல்லப்பட்டது. பெருங்களூர்  அரசு மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் ஏராளமான சவுக்கு மற்றும் தைல மரங்கள் கஜா புயலால் சரிந்தும்,  முறிந்தும் விழுந்து உள்ளன. அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி இதுவரை  தொடங்கப்படவில்லை. இதேபோல் மாவட்டத்தில் பெரும்பாலான துவக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் உடைந்த கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை. மரங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. மின்சாரம், குடிநீர் இல்லை. பள்ளி குழந்தைகள் நலன்  கருதி உடனடியாக அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம  மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், பள்ளிகள் சேதம் அடைந்து பரிதாபமாக  காட்சி அளிக்கின்றன. 10 நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இனி பள்ளி திறந்தாலும் மாணவர்கள் செல்வது சிரமம் தான். ஏனென்றால் அவர்களுக்கு குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை. உணவு தயாரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் பள்ளி கட்டிடங்கள், வீடுகள் சீரமைக்கப்படவில்லை. சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தப்படவில்லை. விவசாய நிலங்கள் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எப்போது இயல்பு நிலை திரும்பும், வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் ஏக்கத்துடன் உள்ளன். எனவே மீட்பு பணிக்கு உதவ வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் நிலையம் கடும் பாதிப்பு: கஜா புயலால் புதுக்கோட்டை ரயில்  நிலையமும் பயங்கரமாக சூறையாடப்பட்டுள்ளது. திருச்சி-காரைக்குடி-ராமேஸ்வரம்  வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையமான புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  3 நடைமேடைகள் உள்ளன. இந்த 3 நடைமேடைகளிலும் உள்ள மேற்கூரைகளும்,  நடைமேம்பாலத்தின் கூரைகளும் கஜா புயலை தாக்குப்பிடிக்க முடியாமல்  சேதமடைந்துள்ளது. மேற்கூரைகளின் உடைந்த பகுதிகள் அனைத்தும் தண்டவாளங்களில்  சிதறி கிடக்கின்றன. ரயில் நிலையத்தின் முன்பகுதியில் சரிந்து விழுந்த  இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான கூடாரமும் இன்னும் சீரமைக்கப்படவில்லை.  இதனால்  பயணிகள் மழையில் நனைந்து கொண்டு தான் நிற்கவேண்டியது உள்ளது.  புயலால் பாதிக்கப்பட்டு 10 நாட்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gaza ,storm hunt ,farmland , Gajah Storm, Hunting, Trees, Farmland, Electricity
× RELATED தெற்கு காசாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்!