×

பிரபல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை கேத் சர்மா

மும்பை: இந்தி திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சுபாஷ் கய்க்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை நடிகை கேத் சர்மா வாபஸ் பெற்றிருக்கிறார். வழக்கை போலீசார் கையாளும் விதம் குறித்து கடும் அதிருப்தி அடைந்து அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் ‘மீ டூ’ என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக திரைப்பட பிரபலங்கள் கூறி வரும் புகார்கள் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதேபோல், இந்தி திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுபாஷ் கய்க்கு எதிராகவும் பாலியல் புகார் கூறப்பட்டது. நடிகை கேத் சர்மா, மும்பை அந்தேரியின் டி.என்.நகர் காவல் நிலையத்தில் இந்த புகாரை தாக்கல் செய்திருந்தார். ஆனால் வழக்கை போலீசார் கையாளும் விதம் குறித்து அதிருப்தி அடைந்த அவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயாரையும் மற்றும் குடும்பத்தினரையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது என்று கூறி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும் இதை உறுதி செய்தார். அந்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில், “நடிகை கேத் சர்மாவின் விரிவான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக போலீஸ் அதிகாரிகள் அவரை அணுகினர். அதற்கு முன்பு அவருடைய வாக்குமூலத்தை பெறச் சென்றபோது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் இப்போது தாயார் உடல் நிலை சரியில்லை என்றும் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை வாபஸ் பெறுவதாக எழுத்து மூலம் எழுதிக் கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகை கேத் சர்மாவிடம் கேட்டதற்கு, “சுபாஷ் கய்க்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றது உண்மைதான். எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு இங்கும் அங்கும் அலைவதற்கு பதிலாக என் குடும்பத்தையும் உடல்நிலை சரியில்லாத தாயாரையும் கவனிக்க விரும்புகிறேன். வழக்கை பதிவு செய்ததில் இருந்தே குடும்பத்தினர் மிகவும் கவலையுடன் இருக்கிறார்கள்“ என்றார்.
புகாரை வாபஸ் பெற்றது குறித்து நடிகை கேத் சர்மா மேலும் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், “ஒட்டுமொத்த ‘மீ டூ’ பிரசாரத்தையும் மக்கள் கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள். எதுவுமே நடக்கவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் மட்டும்தான் போலீசார் பிசியாக இருக்கிறார்கள். அப்படி இருந்தால் இந்த பிரசாரத்தால் என்ன பயன்?” என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kath Sharma ,Subhash Ghai , Subhash Ghai, sexual harassment, actress Kath Sharma
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...