×

சேலத்தில் கணவர் இறந்ததால் வந்த 2.75 லட்சம் இன்ஸ்சூரன்ஸ் பணத்தை அபகரித்த தனியார் வங்கி : பெண், கண்ணீர் புகார்

சேலம்: சேலத்தில் கணவர் இறந்ததால் தனக்கு வந்த 2.75 லட்சம் இன்ஸ்சூரன்ஸ் பணத்தை வங்கி நிர்வாகமே எடுத்துக் கொண்டதாக கலெக்டரிடம் பெண், கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். சேலம் அம்மாபேட்டை குமரன்காலனியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மனைவி ஸ்ரீதேவி (38). இவர் நேற்று, தனது இரு மகள்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு கலெக்டர் ரோகிணியிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது கணவர் நாகேஷ், கடந்த ஜனவரி மாதம் வாகன விபத்தில் இறந்தார். இதனால், 3 குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறேன்.

இந்த சூழலில், நான் ஏற்கனவே 15 ஆண்டுகளாக களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுவில் வரவு, செலவு வைத்திருந்தபோது, வருடந்தோறும் 300 இன்ஸ்சூரன்ஸ் தொகை செலுத்தி வந்தேன். தற்போது கணவர் இறந்ததால், அதற்கான இழப்பீட்டு தொகையாக 2.75 லட்சத்தை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம், என் வங்கி கணக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செலுத்தியது. ஆனால், அந்த பணம் 2.75 லட்சத்தையும் நான் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கி நிர்வாகம் எடுத்துக் கொண்டது. இது பற்றி அவர்களிடம் கேட்டபோது, சுய உதவிக்குழுவில் உள்ள இதர உறுப்பினர்கள் வாங்கிய கடன் பணத்தை திருப்பி செலுத்தாததால் எடுத்துக் கொண்டோம் எனக்கூறுகின்றனர்.

ஆகவே, என் கணவர் இறப்பிற்கு வந்த இழப்பீட்டு தொகையை எனக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை எடுத்துக் கொண்ட வங்கி நிர்வாகம் மீதும் உரிய மேல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.  மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதனிடையே முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி அதிகாரிகள், இப்பிரச்னை குறித்து விசாரித்து வருகின்றனர். அவர்கள், பணத்தை எடுத்த தனியார் வங்கியின் மேலாளரிடம் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bank ,insurers ,death , Salem, Insurance, Banking
× RELATED வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்