×

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியானது : அருவியில் வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை:  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது. அருவியில் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அணை அமைந்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நெல்லை மாவட்டத்தின் பெரிய அணையாகும். இந்த அணையில் 5 ஆயிரத்து 511 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். மணிமுத்தாறு அணைக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக நீர்வரத்து இருக்கும்.

இதனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அணை நிரம்புவது உண்டு. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதிய மழை இல்லாததால் அணை நிரம்பவில்லை. எனினும் குடிநீர், விவசாய தேவை கருதி அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த அணையின் மூலம் பெருங்கால் பாசனம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள 4 ரீச்களின் மூலம் 23 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதில் முதல் இரண்டு ரீச்களில் ஒரு ஆண்டும், அதற்கு அடுத்த இரண்டு ரீச்களில் மற்றொரு ஆண்டும் என சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும். அணையில் அதிக தண்ணீர் இருக்கும் பட்சத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 4 ரீச்களிலும் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிடும்.தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து உள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அணையில் 98.75 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 99.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைப்பகுதியில் 28.2 மிமீ மழை பதிவாகி இருந்தது. அணையில் இருந்து 40 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 100 அடியை நெருங்கியது. மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு அதிக நீர்வரத்து உள்ளதால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மழை தொடரும் பட்சத்தில் மணிமுத்தாறு அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. மணிமுத்தாறு அணை நிரம்பினால் பாசனம், குடிநீர் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் தெரிவித்தனர்.

பயணிகளை மிரட்டும் குரங்குகள்

மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் விழும் போது சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வர். அப்போது சுற்றுலா வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை வனப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு வழங்குவது வழக்கம். தற்போது அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை. இதனால் அருவிப் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. வனப்பகுதியில் உலவும் வானரங்கள் சுற்றி, சுற்றி வருவதும், சுற்றுலா பயணிகள் யாராவது வருகிறார்களா என வேடிக்கை பார்ப்பதுமாக உள்ளது. அருவிக்கரையை அரசு பஸ்கள் மெதுவாக கடக்கும்போது பஸ்சிற்குள் பாயும் குரங்குகள் ஜன்னலோரம் அமர்ந்துள்ள பயணிகளின் கைகளில் இருக்கும் பொருட்களை பறிக்க முயற்சிக்கின்றன. இதனால் பயணிகள் அச்சமடைகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manimuthur , Waterfalls, Tourists, Manimutharu Dam
× RELATED பாபநாசம் அணையில் இருந்து மணிமுத்தாறு...