×

ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்தபோது தலைசிறந்த இதய சிகிச்சை நிபுணரை அழைக்காதது ஏன்?

* பேஸ்மேக்கருடன் காவிரி பற்றி ஆலோசனை நடத்தினாரா?
* டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் l மரணத்தில் தொடரும் மர்மம்

சென்னை: ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டபோது தலைசிறந்த இதய சிகிச்சை நிபுணரை மருத்துவ நிர்வாகம் அழைக்காதது ஏன் என்பது குறித்த பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதை நேற்று நடந்த ஆணைய விசாரணையில் இதய சிறப்பு நிபுணர் அளித்த பதிலால் ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த ஆணையத்தில் பலரிடம் விசாரணை, மறுவிசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் அப்போலோ இதயவியல் நிபுணர் கார்த்திகேசன் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் குறுக்கு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பில் இருந்து அரவிந்தன் குறுக்கு விசாரணை செய்தார்.

இது குறித்து விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: கார்த்திகேசன் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 22.9.2016ம் ஆண்டு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இரவு 11 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் அழைத்ததன் பேரில் இதயதுடிப்பு சிறப்பு நிபுணரான நான் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால், ஜெயலலிதாவை பார்க்கவில்லை. மானிட்டரை மட்டுமே பார்த்தேன். அவரது ரிப்போர்ட்டில் எல்லாம் சரியாக இருந்தது.  பின்னர், செப்.27ம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் என்னை அழைத்து, ஜெயலலிதாவிற்கு வைக்கப்பட்டுள்ள பேஸ்மேக்கர் கருவியை அகற்றலாமா வேண்டாமா என்று கேட்டனர்.  அப்போது நான் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த ரிப்போர்ட்டில் அவருக்கு இதயதுடிப்பு ஏறி, இறங்கியுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் பேஸ்மேக்கர் பயனாக இருந்துள்ளது. ஆனால், 27ம் தேதி ஜெயலலிதா உடல் நிலை நன்றாக இருந்தது என்று கூறி வந்தனர். அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பெயரளவுக்கு தான் வைக்கப்பட்டிருந்தது என்று மற்ற டாக்டர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  ஆனால், கார்த்திகேசன் பேஸ்மேக்கர் அவருக்கு பயனாக இருந்தது என்று கூறியுள்ளார். செப்டம்பர் 22ம் தேதியில் இருந்தே ஜெயலலிதா இதய துடிப்பு சரியில்லை என்பதன் மூலம், செப்டம்பர் 23ம் தேதி அவர் எப்படி பேசியிருக்க முடியும். அதே நேரத்தில் 27ம் தேதி காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாக கூறுவதும் நம்ப முடியாதவையாக தான் உள்ளது.
செப்டம்பர் 27.9.2016க்கு பிறகு ஜெயலலிதா இறக்கும் வரை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

என்னை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அழைக்கவில்லை. இதய வல்லுனர்கள், கிரிட்டிக்கல் கேர் டாக்டர்கள் என் சேவை தேவையில்லை என்று நினைத்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதய துடிப்பில் சிறப்பு படிப்பை மற்ற டாக்டர்கள் படித்துள்ளனரா என்று கேட்டபோது, அப்படி யாரும் இல்லை. இதன் மூலம், இந்த டாக்டரை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக அளவில் இந்த சிறப்பு படிப்பு படித்த டாக்டர்களை கடைசி வரை அழைக்காமல் இருந்ததற்கு காரணம் யார், அவர் யாருடைய ஏற்பாட்டின் கீழ் அழைக்கப்படவில்லை. 4ம் தேதி ஜெயலலிதாவிற்கு கார்டியாக் அரெஸ்ட் வந்த பிறகு அழைத்து இருக்கலாம். எக்மோ பொருத்தியிருந்த போது, இதயதுடிப்பு வருமா என்று டாக்டர்கள் காத்திருந்தனர். அந்த சமயத்தில் அவரை அழைக்கவில்லை. இதனால் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : heartbeat consultant ,Jayalalithaa ,Cardiac Arrest , Jayalalitha
× RELATED ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்