×

அடையாறு, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம்

புதுடெல்லி: அடையாறு, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தமான செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அடையாறு, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், பல்வேறு தொழிற்சாலைகள் கழிவுகளை கொட்டுவதை தடுக்கக் கோரியும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அடையாறு, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தமான நடந்து கொள்வதற்கு தலைமை நீதிபதி ஆதர்ஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பொதுப்பணித் துறை, முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கையானது தெளிவற்றதாக இருக்கிறது. பிரச்னைகளை குறைப்பதற்கு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதையும் அறிக்கையின் மூலம் அறிகிறோம். பக்கிங்காம் கால்வாய் சீரமைப்பு பணியும் கவலை அளிக்கும் விதமாகவே உள்ளது. இப்பணிக்காக ஜவகர்லால் நேரு நகர்ப்புற புத்தாக்க திட்டத்தின் கீழ்  ரூ.603.67 கோடி நிதியை மட்டுமே அரசு நிர்வாகம் பெற்றுள்ளது. மேலும், 2017, 2018ம் ஆண்டுகளில் பருவமழை காலத்திற்கு தயாராகும் முன்னேற்பாடுகளுக்கான பணிகளுக்கு முறையே ரூ.70 லட்சம், ரூ.80.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. இதேபோல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் தமிழக அரசு மெத்தனமாகவே நடந்துள்ளது. மொத்தம் 26,300 ஆக்கிரமிப்புகள் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், வெறும் 408 மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. மீதம் 25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் தொடர்கின்றன.நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஏனெனில், எத்தனை ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கு தொடுத்துள்ளார்கள், அவற்றின் நிலை என்ன என்பது குறித்த எந்த தகவலையும் அரசு தரப்பில் தரவில்லை.  எனவே, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, அடையாறு, கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்பு அகற்றம், மாசு ஏற்படுவதை தடுக்கும் பணிகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் நேரடியாக பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Adoor ,Tamilnadu ,Kovalam , Adayar, Kowam river, occupations, fine for the Tamil Nadu government
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...