×

குடிமகன்களை குஷிப்படுத்தும் 24 மணி நேர டாஸ்மாக் பார் : தாம்பரம் காவல்நிலையம் அருகே களைகட்டும் விற்பனை

தாம்பரம்: தாம்பரம் காவல்நிலையம் அருகே இரவு முழுவதும் இயங்கும் டாஸ்மாக் பாரால் குடிமகன்கள் குடித்துவிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் போலீசார் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.தாம்பரம் காவல் நிலையம் அருகில் மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் இரண்டு அரசு டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இங்கு உள்ள டாஸ்மாக் பார்களில் 10 மணிக்கும் மேல் கள்ளசந்தையில் விடிய விடிய மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் இரவு நேரங்களில் இங்குள்ள டாஸ்மாக் பார்களில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதும்.அவ்வாறு வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு நள்ளிரவில் மார்க்கெட் பகுதியில் வியாபாரம் முடித்துவிட்டு கடைகளை சுத்தம்செய்துகொண்டிருக்கும் ஊழியர்களிடம் வீண் தகராறு செய்து வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

போலீசாருக்கு தினமும் ‘சேர வேண்டியது’ சரியாக சென்று சேர்ந்துவிடுவதால் அவர்களும் இவற்றை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் டாஸ்மாக் பார்களை நடத்தி வருபவர்கள் துளிக்கூட பயம் இன்றி விடிய விடிய பாரை திறந்து வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் கட்டணத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்று இரவு முழுவதும் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டு வருவதால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: தாம்பரம் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால், பல இடங்களில் இருந்து வரும் குடிமகன்கள் மதுபாட்டிகளை வாங்கி செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் பாரிலேயே அமர்ந்து இரவு முழுவதும் மதுஅருந்திக்கொண்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கின்றனர் மேலும், எந்த நேரம் மது அருந்தினாலும் போலீசார் தொல்லை இல்லாததால் இந்த பார் குடிமகன்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இதுகுறித்து வியாபாரிகள் சார்பில் தாம்பரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தால் ‘அது எல்லாம் அப்படி தான் இருக்கும் என்ன பண்றது உங்கவேலையா பாருங்க’ என அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.சில நேரங்களில் மட்டும் கணக்குக்காக வழக்கு பதிவு செய்கின்றனர். பின்னர், மீண்டும் வழக்கம்போல இரவு நேரத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் பார் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்று போலீசாரே பார் உரிமையாளர்களுக்கு துணைபோவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சட்டத்தை காக்க மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையே கையூட்டு பெற்று கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையாக உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : citizens ,police station ,Tambaram ,straw sale , Tambaram Police Station, Taskmak Bar, 24 hours
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...