×

முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்

சென்னை: முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது.அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திருத்தணி முருகன் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் புஷ்ப அலங்காரம் நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு திருக்கோயிலில் நாதஸ்வர வித்வான்கள் வழங்கிய இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் 6 மணிக்கு திருவடி சபை பக்தி இன்னிசை சொற்பொழிவு, விஸ்வநாதனின் பரத நாட்டியம் நடைபெற்றது.  திருப்போரூர்: புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று காலை 9.30 மணியளவில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, கோயில் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க, முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அப்போது, பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு இடையே கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயிலில் பல்லக்கு உற்சவம், இரவில் கிளி, ஆட்டுகிடா, வெள்ளி அன்னம் உள்பட பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமானின் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 13ம் தேதி மாலை 6 மணியளவில் கோயில் பிரதான வாயிலின் முன்பு நடைபெறுகிறது. 14ம் தேதி மாலை முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் சுப்ரமணிய சாமி கோயில்,  சென்னை வடபழனி முருகன் கோயிலில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kandasakti Festival ,temples ,Murugan , Murugan Temple, Kandasakti Festival, Sreepadai House
× RELATED வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று...