×

சபரிமலையில் நாளை நடைதிறப்பு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு

திருவனந்தபுரம்: சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறக்கப்படும் நிலையில் பக்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், கடந்த சில வாரங்களாக கேரளாவில் ேபாராட்டங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஐப்பசி மாத பூஜையின் போது சபரிமலையில்  வன்முறை வெடித்தது. இளம்பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தடியடி, கல்வீச்சில் பலர் காயமடைந்தனர்.இந்தநிலையில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை ேகாயில் நடை நாளை (5ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. 6ம் தேதி தீபாவாளியன்று மட்டும் நடை திறந்திருக்கும். அன்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர்  இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். இந்த சமயத்தில் இளம்பெண்கள் வரலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளன.எந்த காரணம் கொண்டும் இளம்பெண்களை அனுமதிக்க மாட்ேடாம் என்று பாஜ, மற்றும் இந்து அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஆனால் இளம்பெண்கள் தரிசனத்திற்கு வந்தால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சபரிமலையில் மீண்டும் கலவர அபாயம் சூழ்ந்துள்ளது. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் வரலாறு காணாத வகையில்  போலீஸ் பாதுகாப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சித்திரை ஆட்டத்திருநாளுக்காக நடை திறக்கப்படும்போது 100க்கும் குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் இம்முறை ஒரு ஏடிஜிபி, 2  ஐஜிக்கள், 5 எஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள் உள்பட 2300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு தொடங்கியுள்ளது. ஏடிஜிபி அனில்காந்த், 2 ஐஜிக்கள் சபரிமலையில்  பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே 6ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சபரிமலையில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல் முதல் சன்னிதானம் வரை சிறப்பு பாதுகாப்பு  பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் தீவிர சோதனைக்கு பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல் பகுதியில் யாருக்கும் தங்க அனுமதி கிடையாது. வழக்கமாக சபரிமலை நடை திறக்கப்படும் சமயங்களில் 2 நாட்களுக்கு முன்பே பம்பை வரை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை 5ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பின்னரே நிலக்கலில் இருந்து பக்தர்கள்  பம்பை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala , Strict control , tomorrow walkers , Sabarimala
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...