×

உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை: உயர்நீதிமன்றம் விளக்கம்

சென்னை: உரிமம் பெறாத மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு மட்டுமே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை கோரி  தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் மருத்துவ சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்து விற்கப்படுவதாகவும், காலாவதியான போலி மருந்துகள் ஆன்லைனில் விற்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் மருந்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் மருத்துவர் பரிந்துரை செய்யவேண்டும் என விதி உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதி மகாதேவன் முன் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் ஆன்லைனில் மருந்து, மாத்திரைகள் விற்க 2 வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், TNMEDS.COM என்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பு வாதியாக சேர்க்க கோரி, நீதிபதி மகாதேவன் முன் முறையிடப்பட்டது.

மேலும், உயர்நீதிமன்ற தடையால், உரிமம் பெற்ற ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனங்கள்  பாதிக்கப்படுவதாகவும், தங்கள் நிறுவனம் மருந்துப் பொருட்களை வாங்கி விற்பனை மட்டுமே செய்வதாகவும், அந்த ஆன்லைன் மருந்து நிறுவனம் கூறியது. இதை கேட்ட நீதிபதி மகாதேவன், உரிமம் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை விதித்ததாகவும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார். முன்னதாக, இந்த தடையை நீக்க கோரி ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை விரிவான விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ஆர்.மகாதேவன் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : firms ,High Court , License, company, online, pharmacy sales, high court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...