×

மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறை முடிவு: சிபிஐ நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க பரிசீலிக்கப்படுவதாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.    கடந்த 2006ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ்  நிறுனவத்துக்கு முறைகேடாக ரூ.305 கோடி நேரடி வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான அனுமதி வழங்கியதாகவும், இதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது பற்றி சிபிஐ.யும், மத்திய அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிதம்பரம் உட்பட 9 பேரை குற்றவாளியாக சேர்த்து, அமலாக்கப் பிரிவு சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.      இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஒரு முறையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு முறையும்  விசாரித்துள்ளனர். இதில், சிதம்பரத்திடமும், கார்த்தி சிதம்பரத்திடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகையும், ஒரு துணை குற்றப்பத்திரிகையும் கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவரை நவம்பர் 1ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டது.  இந்நிலையில். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை புதிய மனு தாக்கல் செய்தது. அதில், ‘இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது. குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க பரிசீலிக்கப்படுகிறது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை முமுமையாக பாதிக்கும். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Enforcement Directorate ,P. Chidambaram ,Maxis , P. Chidambaram,custody,Maxis,CBI ,CBI probe
× RELATED டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு...