×

224 ரன் வித்தியாசத்தில் வெ. இண்டீஸ் படுதோல்வி முன்னிலை பெற்றது இந்தியா: ஆட்டநாயகன் ரோகித் ஷர்மா

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், 224 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ரிஷப் பன்ட், சாஹலுக்கு பதிலாக ஆல் ரவுண்டர்கள் கேதார் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபெத் மெக்காய் நீக்கப்பட்டு கீமோ பால் இடம் பெற்றார்.
இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித், தவான் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவரில் 71 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். தவான் 38 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி தொடர்ச்சியாக 4வது சதம் விளாசி இலங்கையின் சங்கக்கரா சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 16 ரன் எடுத்து ரோச் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஹோப் வசம் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து, ரோகித் - ராயுடு ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் விழி பிதுங்கினர். அபாரமாக விளையாடிய ரோகித் 21வது சதத்தை நிறைவு செய்ய, மறுமுனையில் ராயுடு அரை சதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 211 ரன் சேர்த்து அசத்தினர். ரோகித் 162 ரன் (137 பந்து, 20 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ராயுடு சரியாக 100 ரன் (81 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய டோனி 23 ரன் எடுத்து (15 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்க, இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்தது. கேதார் 16 ரன், ஜடேஜா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோச் 2, நர்ஸ், கீமோ பால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. ஹேம்ராஜ், கியரன் பாவெல் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 20 ரன் சேர்த்தது. ஹேம்ராஜ் 14 ரன் எடுத்து வெளியேற, ஷாய் ஹோப் (0) மற்றுன் கியரன் பாவெல் (4) அடுத்தடுத்து ரன் அவுட்டாகினர். விக்கெட் இழப்பின்றி 20 ரன் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ், 20 ரன்னுக்கு 3 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அந்த அணி... ஹெட்மயர் (13), ரோவ்மன் பாவெல் (1), சாமுவேல்ஸ் (18) ஆகியோர் கலீல் அகமது வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க 56 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மட்டும் உறுதியுடன் போராட, ஆலன் 10, நர்ஸ் 8, கீமோ பால் 19, ரோச் 6 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரிலேயே 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹோல்டர் 54 ரன்னுடன் (70 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் கலீல், குல்தீப் தலா 3, குமார், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரோகித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 224 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indies ,India ,Anthony Rohith Sharma , Weill. Indies, fiasco, India, and boyfriend Rohit Sharma
× RELATED ரூதர்போர்டு, அல்ஜாரி அதிரடியால்...