திருச்சி: சென்னையில் இருந்து காரிலேயே திருச்சி வரையில் ஆம்னி பஸ்சை பின்தொடர்ந்து, பைனான்ஸ் ஊழியர் 2 பேரிடம் 4 பேர் கும்ப ₹1 கோடியை கொள்ளையடித்து சென்றது. இது, ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருகிறார். இங்கேயே பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் சுந்தரேசன்(55), மற்றும் மதியழகன்(59) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இருவரையும் சென்னைக்கு அனுப்பிய முருகேசன், அங்கு இருவர் 2 பேக்கில் ₹1 கோடி தருவார்கள். அதனை வாங்கி கொண்டு வாருங்கள் என கூறி அனுப்பி வைத்தார். அவர்களை தொடர்பு கொள்ள செல்போன் எண்ணை கொடுத்தார்.அதன்படி, இருவரும் சென்னை அசோக் பில்லருக்கு சென்றனர். அப்போது, முருகேசன் தந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டனர். உடனே, 2 பேர் பைக்கில் வந்து 2 பேக்கை கொடுத்தனர். அதில், தலா ₹50 லட்சம் இருந்தது. அந்த பேக்குகளை வாங்கிக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ்சில் திருச்சிக்கு வந்தனர். அதிகாலை 5.20 மணிக்கு திருச்சி தலைமை தபால் நிலைய பஸ் நிறுத்தத்தில் 2 பேரும் இறங்கினர். ஆட்டோ பிடிக்க நின்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு ஒரு கார் வந்தது. பனி குல்லா அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கிய 4 பேர் சுந்தரேசன், மதியழகனிடம் சென்று, `நாங்கள் போலீஸ்; உங்கள் பேக்கை சோதனை செய்ய வேண்டும்; எங்களிடம் கொடுங்கள்’ என கேட்டனர். மதியழகன் பேக்கை கொடுத்துவிட்டார். ஆனால் சுந்தரேசன் சந்தேகமடைந்து தரமறுத்தார். இதையடுத்து அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக பேக்கை பறித்தனர். பின்னர், 4 பேரும் காரில் ஏறி குட்ஷெட் மேம்பாலம் வழியாக சென்று மறைந்தனர்.
சென்னையில் இருந்து பின்தொடர்ந்தனர்: இதுபற்றி 2 பேரும், திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதலில், தலைமை தபால் நிலைய சிக்னலில் உள்ள கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால் பதிவுகளை சேமித்து வைக்கும் ஹார்ட்டிஸ்க் இல்லாததால் பதிவாகவில்லை. தொடர்ந்து சமயபுரம் சுங்கசாவடியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்களின் கார், சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சை பின் தொடர்ந்து வந்தது தெரியவந்தது. அந்த காரின் பதிவு டி.என். 09-சிடி-8040 என்று இருந்தது. அதனை கொண்டு விசாரித்தால் அந்த நம்பர் பைக்குக்குரியது என தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறுகையில், `வட்டிப்பணம் ₹1 கோடி வசூலானதாக இருவரும் கூறுவது சந்தேகமாக உள்ளது’என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி