×

டெங்கு ஆய்வு செய்ய வீட்டுக்குள் சென்ற அரசு செயலர், கலெக்டரை விரட்ட நாய்களை ஏவியவர் மீது வழக்கு: வீட்டுக்கு சீல் ரூ10 ஆயிரம் அபராதம்

சென்னை: திருவள்ளூர் அருகே டெங்கு ஆய்வு செய்ய வீட்டுக்குள் சுகாதாரத்துறை செயலர், கலெக்டர் சென்றபோது, நாய்களை ஏவியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டுக்கு வருவாய் அதிகாரிகள் சீல் வைத்து, ரூ10 ஆயிரம் அபராதம் விதித்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள காந்தி தெருவில் பாலகிருஷ்ணன் (54) என்பவரது வீட்டின் வெளியே கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் கால்நடைகளை கட்டிவைத்தும், புற்கள் விளைந்தும் புதராக காட்சியளித்தது. அந்த வீட்டுக்குள் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பிடிஓ சந்தானம், ஊராட்சி செயலர் மகேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் சென்றனர்.

அப்போது, அந்த வீட்டிற்குள் ஆய்வு செய்வதை தடுக்க, வீட்டின் உரிமையாளர் பாலகிருஷ்ணன், தனது நான்கு நாய்களை அதிகாரிகள் மீது ஏவியுள்ளார். நாய்கள் அனைத்தும் குரைத்துக்கொண்டு அதிகாரிகளை துரத்தி கடிக்க பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் அலறியபடி வெளியே ஓடினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பாலகிருஷ்ணனுக்கு கொசுப்புழு வளர்க்கும் வகையில் செயல்பட்டதாக ரூ10 ஆயிரம் அபராதத்தை ஊராட்சி நிர்வாகம் விதித்தது. சுகாதாரமற்ற வகையில் இருந்த அவரது வீட்டுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
தொடர்ந்து, அரசு அலுவலர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல், நாய்களை ஏவி பணி செய்யவிடாமல் தடுத்த பாலகிருஷ்ணன் மீது, கடம்பத்தூர் பிடிஓ சந்தானம் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

எச்சரிக்கை
திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஊராட்சியில் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் ஆய்வுக்கு சென்ற அரசு அதிகாரிகளை தடுத்து, நாய்களை ஏவியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பணி செய்யவிடாமல் தடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் மகேஸ்வரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government Secretary ,Dinesh Trivedi , Dengue, Secretary of State, House Seal, Penalty
× RELATED வண்டலூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட...