×

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டி இந்திய அணியில் புவனேஸ்வர், பூம்ரா

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பூம்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டி வெற்றி-தோல்வியின்றி சமனில் முடிந்தது. 2 போட்டிகள் முடிவில் இந்திய அணி 1-0 என்ற முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில், அடுத்த 3 போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில், முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், பூம்ரா இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்களுக்கு முதல் 2 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வாய்ப்பு பெற்றார். ஆனால், வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஷமி 2 போட்டியில் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியதுடன், 140 ரன்களை விட்டுத் தந்தார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ்வும் சிறப்பாக செயல்படவில்லை. முதல் போட்டியில் அவர் விக்கெட் ஏதுமின்றி 64 ரன்களையும், 2வது போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தி 78 ரன்களையும் வாரி கொடுத்துள்ளார். மேலும், 2வது ஒருநாள் போட்டியின் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 14 ரன் தேவை என்ற நிலையில் உமேஷ் பந்துவீசினார். அவரது பந்துவீச்சில், கடைசி பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டதால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனாலும், உமேஷ் யாதவ் அணியில் நீடிக்கிறார்.
அடுத்த  3 போட்டிகள் வரும் 27ம் தேதி புனேவிலும், 29ம் தேதி மும்பையிலும், நவம்பர் 1ம் தேதி திருவனந்தபுரத்திலும் நடக்க உள்ளது. புவனேஸ்வர் குமார், பூம்ரா அணிக்கு திரும்பியிருப்பதால் இந்திய அணியின் பந்துவீச்சு பலமடைந்துள்ளது.
அணி விபரம்: கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், அம்பாதி ராயுடு, ரிஷப் பன்ட், எம்.எஸ்.டோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhuvaneswar ,Bhumra ,match ,West Indies , Bhuvaneswar,Boomra,3 ODI match against,West Indies
× RELATED ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன்...