×

சபரிமலை கோயில் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு : கேரள பிராமணர்கள் சங்கம் தாக்கல்

புதுடெல்லி : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிப்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி கேரள அனைத்து பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இதுநாள் வரை இருந்த பாரம்பரிய நடைமுறைக்கு மாறாக அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இது கேரள மாநிலம் மட்டுலில்லாமல் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என அம்மாநில அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.  பெண்களை அங்கு செல்ல விடாமல் பல்வேறு போராட்டக்குழுவினர்  தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பாதைகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதில் குறிப்பாக சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் போலீசாரால் தடியடி நடத்தப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி கேரள அனைத்து பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உள்ளது. அதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என்ற தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட மனுவானது வரும் 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேப்போல் ஏற்கனவே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இதுவரை 28க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala temple ,affair ,Supreme Court: The Kerala Brahmin Association , Sabarimala temple case, Kerala Brahmin Association
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு