×

விசாரணைக்கு அழைத்து வந்த ரவுடி மர்மச்சாவு காவல்நிலையம் 2வது நாளாக முற்றுகை

* வியாசர்பாடியில் போலீஸ் குவிப்பு * போலீசார் மீது சரமாரி குற்றச்சாட்டு

சென்னை: விசாரணைக்கு அழைத்து சென்ற ரவுடி மர்மமாக இறந்ததையொட்டி, நேற்று 2வது நாளாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சென்னை வியாசர்பாடி, பிவி காலனி, 2வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (27), பிரபல ரவுடி. இவர் மீது பல காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சோழவரத்தில் சாலமன் என்பவரை வெட்டிக்கொன்ற வழக்கில் கார்த்திக் முக்கிய குற்றவாளி. இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கார்த்திக், மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கார்த்திக், தனது கூட்டாளிகளுடன் அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கார்த்திக், அவரது கூட்டாளிகள் அருண்பாண்டியன் (27), ராஜ்குமார் (26) ஆகியோரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தனர்.

அப்போது கார்த்திக் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்துவிட்டதாக கூறினர்.இதையடுத்து போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்ததும் கார்த்திக்கின் உறவினர்கள், எம்கேபி நகர் காவல் நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், கார்த்திக்கை போலீசார் அடித்து கொன்றதாக கோஷமிட்டனர். இதைதொடர்ந்து நேற்று 2வது நாளாக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது அவர்கள், ‘ஆர்டிஓ, தாசில்தார் முன்னிலையில் கார்த்திக்கின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யவேண்டும். அப்போதுதான் போலீசார் அடித்து கொன்றது தெரியவரும் என கோஷமிட்டனர்.இதனால் அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ்குமார், நேற்று காலை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சென்று பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், எம்கேபி காவல் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் விசாரணை நடத்தினார். தண்டையார்பேட்டை ஆர்டிஓ ராஜேந்திரனும் விசாரித்து வருகிறார்.

3 பேர் பணியிடமாற்றம்
எம்கேபி நகர் காவல் நிலையத்தில், விசாரணையின் போது ரவுடி கார்த்திக் மர்மமான முறையில் இறந்தார். இதற்கு போலீசார்தான் காரணம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையொட்டி, சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கார்த்திக்கிடம் விசாரணை நடத்திய எஸ்ஐக்கள் ஜெகதீசன், ராஜா, கொடுங்கையூர் போலீஸ்காரர் சியாம்சுந்தர் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

2 பேர் மாயம்
ரவுடி கார்த்திக்கை போலீசார் கைது செய்தபோது அவருடன் இருந்த அருண்பாண்டியன், ராஜ்குமார் ஆகியோரையும் கொண்டு வந்தனர். கார்த்திக் மர்மச்சாவுக்கு பிறகு, அந்த 2 பேர் குறித்து எந்த தகவலும் இல்லை.

மனித உரிமை ஆணையம் வழக்கு
சென்னை எம்.கே.பி நகரில் விசாரணைக்கு என்று அழைத்து சென்ற பிரபல ரவுடி கார்த்திக் இறந்த விவகாரம் நேற்று பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து, காவல்துறை டிஜிபி இது தொடர்பாக ஆறு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உதவி கமிஷனர் அலுவலகத்தில் கொலையா?
ரவுடி கார்த்திக்கை போலீசார் விசாரணை நடத்திய எம்கேபி நகர் காவல் நிலையத்தின் மாடியில், உதவி கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு விசாரிக்கப்படும் குற்றவாளிகள் குறித்து உயர் அதிகாரியான உதவி கமிஷனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அதன்படி தெரிவிக்கவில்லை. விசாரணை நடத்திய 3 பேரை பணியிட மாற்றம் செய்த அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ரவுடியின் சாவில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருக்கலாம். அவர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் ரவுடிகள் பங்கேற்பு
ரவுடி கார்த்திக் சடலத்தை நேற்று மாலை மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதில், புறநகர் பகுதிகளில் இருந்து 300க்கு மேற்பட்ட ரவுடிகள் கலந்து கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rowdy Mara Chacha Police Station ,siege ,trial , Investigation Rowdy Mystery, Police Station, Siege
× RELATED வீட்டில் வளர்க்கப்படும் செல்ல...