×

திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் கோலாகலம் தங்க கருட சேவையை காண திருமலையில் குவிந்த பக்தர்கள்

திருமலை: திருப்பதி கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று தங்க கருட சேவை நடந்தது. இதைக்காண திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பிரமோற்சவத்தின் 4வது நாளான நேற்று முன்தினம் காலை அலங்கரிக்கப்பட்ட தங்க கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதியில் பவனி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு சர்வ பூபாள வாகனத்தில் சுவாமி பவனி வந்தார். அப்போது ஏராளமான நடன கலைஞர்கள் பல்வேறு வேடங்களில் பங்கேற்று நடனம் ஆடியபடி வந்தனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார். மோகினி அவதாரத்தை ரசிக்கும் வகையில், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் உடன் வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக தங்க கருட சேவையை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருமலை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வருகிறது. பல பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே அன்னப்பிரசாதம், குடிநீர் போன்றவை ஸ்ரீவாரி சேவா பக்தர்களால் வழங்கப்பட்டது. பிரமோற்சவத்தின் 6வது நாளான இன்று காலை 9 மணிக்கு உற்சவரான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்ப பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு  கஜ வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

ஆண்டாள் மாலை
மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். 5வது நாளான நேற்று இரவு தனது வாகனமாக தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் கோயிலில் மூலவர் மீதுள்ள மகரகந்து, லட்சுமி ஆரம், சகஸ்ரநாம மாலை ஆரம் அணிந்து மலையப்ப சுவாமி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட துளசி மாலை மற்றும் புதிய குடை கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டது. ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மூலவருக்கு அணிவிக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Devotees ,Tirumalai ,Navarathri Brahmoravam Kolagalam , Navarathri Brahmotsavam, temple, Tirupati, devotees, Tirumalai
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்