×

அவதூறு இ மெயில்கள் அனுப்பிய விவகாரம்: பிரபல பல் மருத்துவர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பல் மருத்துவக் கவுன்சில் தேர்தல் போட்டியில் முன்னாள் கவுன்சில் தலைவருக்கு எதிராக அவதூறு இ-மெயில்களை அனுப்பிய விவகாரத்தில் பிரபல பல் மருத்துவர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் குணசீலன் கடந்த 2013ல் நடந்த பல் மருத்துவக் கவுன்சில் மற்றும் தேசிய ஓரல் மற்றும் பேசியல் சர்ஜன்ஸ் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக தேர்தலில் வாக்களிக்கும் டாக்டர்களுக்கு சென்னையைச் சேர்ந்த டாக்டர் பாலாஜி அவதூறு பரப்பி இ-மெயில்களை அனுப்பியதாக டாக்டக் குணசீலன் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.

 புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில் டாக்டர் பாலாஜியின் மருத்துவமனையில் பணியாற்றும் ஜெயப்பிரகாஷ் என்பவர்தான் இந்த இமெயில்களை கவுன்சில் உறுப்பினர்களுக்கு அனுப்பியதாக தெரியவந்தது.
 அவரிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் பாலாஜி அவரது இமெயிலில் இருந்து தனக்கு அனுப்பிய தகவல்களை கவுன்சில் உறுப்பினர்களுக்கு தான் அனுப்பியதாக ஜெயப்பிரகாஷ் வாக்குமூலம் அளித்தார்.
 அதன் அடிப்படையில், ஜெயப்பிரகாஷ் மற்றும் டாக்டர் பாலாஜி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 (1) (மிரட்டல் விடுதல்), 507 (மொட்டை தகவல்கள் அனுப்புதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

டாக்டர் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்த வழக்கை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் கடந்த 2015ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் டாக்டர் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை.  
 இதையடுத்து, டாக்டர் குணசீலன் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் ெசய்தார். சீராய்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு கடந்த 2016 ஜனவரியில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு விசாரணை அதிகாரிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.  விசாரணை நடத்திய அதிகாரி மீண்டும் 2017 நவம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதிலும், டாக்டர் பாலாஜியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து டாக்டர் குணசீலன் பாதுகாப்பு மனுதாக்கல் ெசய்தார்.

 மனு 11வது பெருநகர மாஜிஸ்திரேட் எஸ்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. டாக்டர் குணசீலன் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, வக்கீல் வி.டி.நரேந்திரன் ஆஜராகினர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த வழக்கில் டாக்டர் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை மீண்டும் விசாரிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. எனவே, ஜெயப்பிரகாஷ் மற்றும் டாக்டர் பாலாஜி வரும் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,dentist , Slander e-mails, dentist, court
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...