×

ஸ்டார் ஓட்டல் போல ஜொலிக்கும் வடசேரி காவல் நிலையம் : மத்திய அரசின் விருதுக்கு தயாரானது

நாகர்கோவில்: மத்திய அரசின் விருதுக்காக ஸ்டார் ஓட்டல் மாடலுக்கு வடசேரி காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அலங்கார விளக்குகளால் அது ஜொலிக்கிறது. சிவப்பு கலரின் வர்ணம், தூசி படர்ந்த பைல்கள், கடுகடுப்புடன் உட்கார்ந்து இருக்கும் காவலர்கள் என போலீஸ் நிலையம் என்றாலே நமக்கு இது தான் நினைவுக்கு வரும். ஆனால் இவற்றுக்கு மாறாக ஒரு ஸ்டார் ஓட்டலுக்குள் நுழைந்தால் எப்படி கண்களை கவரும் வகையில் ஜொலிக்குமோ, அதே ஜொலிப்புடன் காட்சி தருகிறது வடசேரி காவல் நிலையம். பார்த்தாலே புருவத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகள் செய்து அசத்தி உள்ளனர் போலீசார். ஏன்?  இந்த திடீர் அலங்கார, ஜொலிப்பு வேலைகள் என்பது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:

2016ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், போலீஸ் சமுதாய பணிகள், கணினி மூலம் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், போலீஸ் நிலையத்தில் பொதுமக்களை வரவேற்கும் முறைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த 2017ல் 10 போலீஸ் நிலையங்கள் சிறந்த போலீஸ் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டன. கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. அதே போல் இந்த ஆண்டுக்கான விருதுக்காக தமிழகத்தில் காவல் நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் நடந்தன.
 
இது தொடர்பாக காவல் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டு காவல் நிலைய பணிகள், குற்ற வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு தண்டனைகள் பெற்று கொடுத்தல், வழக்கு விசாரணைகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து விசாரணையை வேகமாக முடித்தல் உள்ளிட்ட பல கட்டங்களாக காவல் நிலையங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இருந்து 5 காவல் நிலையங்களை தேர்வு செய்து, மத்திய அரசின் விருதுக்கான பரிந்துரைக்காக அனுப்பி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அந்த 5 காவல் நிலையங்களில் நாகர்கோவில் வடசேரி காவல் நிலையமும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை, குற்றப்பத்திரிகைகள் தாக்கல், ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வடசேரி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விருது பெற தகுதியான ஏற்பாடுகளுக்காக காவல் நிலையத்தை அழகுப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது. இந்த பணிகள் தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. இளங்கோ, வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மேற்பார்வையில் இந்த பணிகள் நடந்துள்ளன என்றனர். இன்ஸ்பெக்டர் அறை, சப்-இன்ஸ்பெக்டர்கள் அறைகள் உள்ளிட்டவற்றில் பிளைவுட் பொருத்தப்பட்டுள்ளன. அலங்கார எல்.இ.டி. விளக்குகள் கண்களை கவருகின்றன. பார்வையாளர்கள் பகுதிகள், வரவேற்பறைகள் உள்ளிட்டவை தயார் ஆகி உள்ளன. மழை நீர் சேகரிப்பு தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. புகார் அளிக்க வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. எப்படியும் மத்திய அரசின் விருது நிச்சயம் வடசேரி காவல் நிலையத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை, காவல் நிலையத்தை பார்த்ததும் உருவாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Wanderer Police Station ,Central Government , Central Government
× RELATED முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட...