×

முரசொலி ஆசிரியர் செல்வம் மீதான அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முரசொலி ஆசிரியர் செல்வம் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மீது ( இருவரையும் சேர்த்து) அதிமுக அரசு 13 அவதூறு வழக்குகளை தொடர்ந்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், திமுக தலைவர் இறந்ததால் அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, முரசொலி ஆசிரியர் செல்வம் மீது மட்டும் அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், தான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில் தன்னை எப்படி சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற முடியும். எனவே, தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி முரசொலி செல்வம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து, நேற்று முரசொலி ஆசிரியர் செல்வம் மீது தொடரப்பட்ட ஒரு வழக்கை (குடும்ப தலைவர்கள் பதவி பிராமணம் செய்து கொண்டு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தான் அனைத்தும் நடக்கிறது. நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணப்பனை பார்த்தால் காரியம் நடக்கும் என்று திண்டுக்கலை தாண்டிய உண்மை என்று முரசொலியில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிய கேள்வி பதில் மீது தமிழக அரசு தொடரப்பட்ட வழக்கு) ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நேற்று நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் தான் மாற்றியுள்ளது. அரசு அல்ல என்று கூறினார். இதை ஏற்றுக்கெண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனுதாரர் தனது  கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யலாம். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : teacher ,Murasoli ,Supreme Court , Murasoli teacher's bail plea, rosecution special case, Supreme Court order
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...