×

சிலைகளை மண்ணுக்குள் புதைத்த விவகாரம்: தொழிலதிபர் ரன்வீர் ஷா உட்பட 7 பேருக்கு சம்மன்: கும்பகோணத்தில் இன்று விசாரணை

சென்னை: புராதன சிலைகளை பதுக்கியதாக தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் நிறுவனத்தின் பொது மேலாளர் உட்பட 7 பேர் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சிலைகள் கடத்திய வழக்கில் பல அதிரடி நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர். தொழிலதிபர் ரன்வீர் ஷா வீடு மற்றும் பங்களாக்களில் இருந்து ஐம்பொன் சிலைகள் உட்பட 247 கற்சிலைகள் பறிமுதல் ெசய்யப்பட்டன. அதேபோல், ரன்வீர் ஷா தோழியும் தொழில் பங்குதாரருமான கிரண் ராவ் வீட்டை சுற்றிலும் புதைக்கப்பட்ட 23 புராதன கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கடந்த வாரம் தோண்டி எடுத்தனர்.

இரண்டு தொழிலதிபர்கள் வீடுகளில் இருந்து பறிமுதல் ெசய்யப்பட்ட சிலைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்க கோரி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகாமல் வக்கீல் மூலம் பதில் அளித்தனர். அதை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர். பின்னர் தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் ஆகியோர் வெளிநாடு தப்பி செல்லாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் போயஸ் கார்டன் வீட்டில் சிலைகள் புதைக்க உடந்தையாக இருந்த பெண் தொழிலதிபர் கிரண் ராவ் நிறுவனத்தின் பொது மேலாளர் தயாநிதி, அஜிஷ், செந்தில், சதீஷ், பிரகாஷ் உட்பட 7 பேர் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 பெண் தொழிலதிபர் கிரண் ராவ் மும்பையில் இருப்பதால் அவர் இன்று நேரில் ஆஜராக முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் வேறு ஒரு நாளில் நேரில் ஆஜராகுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரன்வீர் ஷா இன்று ஆஜராகாவிட்டால் கைதாவார் என தெரிகிறது..



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : businessman , Statues, Businessman Ranveer Shah
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது