சேலம் : சேலத்தின் பிரதான அடையாளமான திருமணிமுத்தாற்றின் சுவடுகள் மெல்ல, மெல்ல அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்த பகுதி என்று அர்த்தம். இந்த சைலம் தான் காலத்தின் சுழற்சியில் சேலம் என்று மாறி நிற்கிறது. சேலத்தின் வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் தொடர்ச்சியாக செல்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலை, கந்தகிரி மலைகள் உள்ளது.
வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் அரணாக உள்ளது. இங்கிருந்து ராசிபுரம் தாண்டிச் சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லி மலை இருக்கிறது. இவை அனைத்தும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள். சேலத்தின் முக்கிய நீராதாரமே இந்த மலைகள் தான். ஒருகாலத்தில் இந்த மலைகளில் ஆயிரக்கணக்கான அருவிகள் இருந்தன. சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி, மாவட்டத்தில் இருந்த தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி, காவிரியுடன் கலந்தது. தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலத்தின் திருமணி முத்தாற்று தண்ணீருக்கும் இருக்கிறது. திருமணிமுத்தாறு தொன்மையான நதி. மணிமுத்தாநதி, வீரமணிமுத்தாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது.
அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும், அன்னதான சத்திரங்களும் இருந்துள்ளது. இன்றைக்கும் கூட அணைமேடு போன்ற பகுதிகளில் நந்தவனங்கள் தென்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட திருமணி முத்தாற்றின் சுவடுகள் மெல்ல, மெல்ல அழிந்து வருவது மிகவும் வேதனைக்குரியது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். திருமணி முத்தாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மேலும் கூறியதாவது: சேர்வராயன் மலையின் தெற்கில், ஏற்காடு அருகே திருமணிமுத்தாறு உருவானது. அது சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலந்தது. அன்றைய திருமணிமுத்தாற்றில் குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க்கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என 8 வாய்க்கால்கள் இருந்தன.
நகரமலை ஆறு, போதமலை ஆறு, அறுநூத்துமலை ஆறு, ஜருகுமலை ஆறு, கஞ்சமலை ஆறு, கொள்ளை ஆறு என்று 6துணை ஆறுகள் இருந்தன. திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் 25 அணைகள் கட்டப்பட்டன. 290 சங்கிலித் தொடர் ஏரிகளை திருமணிமுத்தாறு நிரப்பியது. 1889ம் ஆண்டில் இந்த நீர் நிலைகளை மேம்படுத்த ரூ. 1,07,568 ஒதுக்கப்பட்டது. இந்த விபரங்கள் அனைத்தும் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை.
தற்போதும் அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு,மேக்னசைட்,குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு,பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலக பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றது. இப்படி நதிக்கரை நாகரீகத்திற்கு வித்திட்டது திருமணி முத்தாறு.
ஆனால் தற்போது அதன் சுவடுகள் அழிந்து வருகிறது. மாநகர பகுதியில் திருமணி முத்தாறு அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தால் எந்த பயனும் இல்லை. அங்கிருந்து ஊரக பகுதிகளுக்கு சென்றால் சாயக்கழிவு நீரே, நுரை பொங்க ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் அதன் நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஒரு நதியின் பயணத்தை வலுக்கட்டாயமாக நிறுத்தி வைத்திருப்பது, எதிர்கால சந்ததிக்கு நாம் இழைக்கும் துரோகம் என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே, திருமணி முத்தாற்றை சீரமைத்து, நீரை சேமித்து புத்துயிர் ஊட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் உண்டு. இவ்வாறு தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
