* சீரமைத்து சுற்றுலாத் தலமாக்கப்படுவது எப்போது?
சேலம் : சேலத்தில் நூற்றாண்டு நினைவுகளை சுமந்து நிற்கும் பனமரத்துப்பட்டி ஏரி, அதன் இயற்கை அழகை மீண்டும் பெறும் வகையில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. சேலம் அருகே ஜருகுமலை அடிவார பகுதியில், 1911ம் ஆண்டு 2400 ஏக்கர் பரப்பளவில் பனமரத்துப்பட்டி ஏரியை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். பனமரத்துப்பட்டி பேரூராட்சி பகுதியாக இருந்தாலும், இன்றுவரை இந்த ஏரி சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்து தான், முதன்முதலில் சேலம் மாநகருக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
இதனால் சேலம் மாநகர மக்களின் தாகம் தீர்த்த முதல் நீர்நிலை என்ற பெருமை இந்த ஏரிக்கு உண்டு. திரும்பிய திசையெல்லாம் பசுமை வார்த்து, கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்த பனமரத்துப்பட்டி ஏரி, அன்றைய காலகட்டங்களில் சினிமா படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாகவும் விளங்கியது. எம்ஜிஆர், எஸ்எஸ்ஆர், விஜயகாந்த் என்று பிரபல நடிகர்கள் பலர், இங்கு வந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். படப்பிடிப்புக்காக வந்த போது எம்ஜிஆர் தங்கிய வீடு, சிதிலமடைந்த நிலையில் இன்று வரை அப்பகுதி மக்களால் ‘எம்ஜிஆர் பங்களா’ என்றே அழைக்கப்படுகிறது.
இந்த ஏரிக்கு வரட்டாறு, கூட்டாறு மற்றும் ஜருகுமலை காப்புக்காடு பகுதியில் இருந்து நீர்வரத்து இருந்தது. வனத்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் மூலம் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், ஏரிக்கான நீர் வரத்து தடைப்பட்டது. நாளடைவில் தொடர் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக, ஏரியில் தண்ணீர் வற்றத்தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் ஏரியில், முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் ஏரியின் நீர்வளம் அடியோடு உறிஞ்சப்பட்டு விட்டது. ஏரியில் நீர்வரத்து இல்லாததால், அந்த பகுதியில் விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பனமரத்துப்பட்டி ஏரியின் நீர்ப்பாசனத்தை நம்பி தான், இந்த பகுதியில் ஆயிரக்காணக்கான ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. ஏரியில் தண்ணீர் இல்லாததால் இங்குள்ள கிணறுகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. விளைநிலங்களிலும் ஆயிரம் அடி வரை ஆழ்துளை கிணறு போட்டாலும், தண்ணீர் கிடைப்பதில்லை. பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரவும் ஏரியின் நீர் வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை நிரம்பும் போது, அதில் இருந்து வெளியேற்றப்படும் லட்சக்கணக்கான கனஅடி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
அதனை பனமரத்துப்பட்டி ஏரியில் கொண்டு வந்து விட்டால், அதன் மூலம் பல ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இதன் மூலம் பெரமனூர் ஏரி, மல்லூர் ஏரி, அத்திக்குட்டை ஏரி, ஆட்டையாம்பட்டி ஏரி ஆகிய ஏரிகளும் நிரம்பும். இந்த திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்,’ என்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பனமரத்துப்பட்டி ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் முடிவடைந்ததும், இயற்கை சூழல் கொண்ட சுற்றுலா தலமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நகர்ப்புற வளர்ச்சி நிதியகத்தின் மூலம் ₹28 கோடி கேட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏரியில் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டுவதற்கு கருவிகள், படகு சவாரி, மீன் மியூசியம் உள்ளிட்ட பொழுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தலமாக்கப்படும். இதற்கான நிதியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்,’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
