குளச்சல்: திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் போது, கி.பி.1741ம் ஆண்டு குளச்சல் கடற்கரையில் வந்திறங்கிய டச்சுப்படையினர் தேங்காப்பட்டணம், இரணியலை கைப்பற்றி விட்டு கல்குளம், கோட்டாறை பிடிக்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த மன்னர் மார்த்தாண்ட வர்மா தளவாய் ராமையனுடன் குளச்சல் வந்து டச்சுப்படையை எதிர்த்தார். மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடம் பீரங்கி படை குறைவு. எனவே அவர் பனை மரங்களை முறித்து அவற்றை மாட்டு வண்டியில் நீட்டி வைத்து தன்னிடம் ஏராளமான பீரங்கிகள் இருப்பதுபோல் பாவனை காட்டினார். இதனால் டச்சுப்படையினர் திருவிதாங்கூர் படையிடம் ‘நம்மைவிடவும் ராட்சத பீரங்கிகள் உள்ளன’ என நம்பி திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்தனர் என செய்திகள் கூறுகின்றன.
குளச்சல் கடற்கரையில் சுமார் 2 மாதங்களாக நடந்த இப்போர் 1741ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முடிவுக்கு வந்து திருவிதாங்கூர் படை வெற்றிபெற்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூண் ஒன்றையும் நிறுவினார். இந்த தூண் மீது காணப்படும் சங்கு முத்திரையே இப்போதும் குளச்சல் நகராட்சி முத்திரையாக உள்ளது.டச்சு போரில் திருவிதாங்கூர் படை வெற்றிபெற்று நேற்றுடன்(31ம் தேதி) 277 வருடம் நிறைவடைகிறது. போர் வெற்றி நினைவு நாளை முன்னிட்டு நேற்று மெட்ராஸ் 19வது ரெஜிமெண்ட் படை வீரர்கள் குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள போர் வெற்றி தூணில் வீர வணக்கம் செலுத்தினர்.
மாவட்ட கூடுதல் கலெக்டர் ராகுல் நாத், எஸ்.பி. ஸ்ரீநாத், கமாண்டிங் ஆபீசர் கர்னல் தினேஷ் சிங் தன்வார், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம், நகராட்சி பொறியாளர் சுரேஷ் ஆகியோர் வெற்றித்தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். ராணுவ தொடர்பு அதிகாரி தன்யா சனல், குளச்சல் டி.எஸ்.பி. வினோஜி, இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன், வின்சென்ட் அன்பரசி, குளச்சல் மறை வட்ட முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ், முன்னாள் படை வீரர்கள் நல சங்க செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
