×

திருச்சியில் ம.நீ.ம.வேட்பாளர் நண்பர் வீட்டில் ஐ.டி. ரெய்டு!: ரூ.10 கோடி பறிமுதல்..அடுத்தடுத்த பிரமுகர்கள் சிக்குவதால் கமல் அதிர்ச்சி..!!

திருச்சி: திருச்சியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீராசக்தியின் நண்பர் லேரோன் வீட்டில் 10 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே வருமானவரித்துறையின் கிடுக்கிப்பிடி சோதனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆகியோரை குறிவைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூலமாக வேட்பாளர்களுக்கு கோடி கோடியாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருச்சியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சியில் மொரை சிட்டி எனும் நிறுவனமானது செப்கோ பிராபர்ட்டி என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு கட்டுமானங்களை செய்து வருகிறது. இந்த இடங்களில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. 2 தினங்களாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணமானது பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மொரை சிட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானத்தை மேற்கொள்பவர் லேரோன் மோராய்ஸ். இவர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீராசக்தியின் நெருக்கிய நண்பர் என கூறப்படுகிறது. தொழிலதிபர் லேரோன் மொராய்ஸ் வீட்டில் நேற்று நடந்த வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராத பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க பாதிக்கப்பட்டு இருந்ததா? என்று வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் வருமான வரி சோதனையில் சிக்கிய லேரோன் மொராய்ஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. பிரச்சாரத்துக்காக திருச்சி சென்ற கமலின் ஹெலிகாப்டரை நிறுத்த இடம் தந்தவர்  மொராய்ஸ். ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் நடந்த சோதனையில் ரூபாய் 11.5 கோடி பணம் சிக்கியது. சந்திரசேகரன் – கமல் இணைந்து அண்மையில் ராஜ்கமல் பிரான்டியர்ஸ் நிறுவனம் தொடங்கியதற்கு ஆதாரமும் சிக்கியது. கமலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் 2வது முறையாக கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மக்கள் நீதி மய்யம் பிரமுகர்கள் சோதனையில் சிக்குவதால் கமல்ஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள மொராய்ஸ் தமிழக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் போட்டியிடும் தொகுதியில் விநியோகிக்க மொராய்ஸ் பணத்தை பதுக்கி இருந்தாரா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. …

The post திருச்சியில் ம.நீ.ம.வேட்பாளர் நண்பர் வீட்டில் ஐ.டி. ரெய்டு!: ரூ.10 கோடி பறிமுதல்..அடுத்தடுத்த பிரமுகர்கள் சிக்குவதால் கமல் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : M.N. ,Trichy ,Kamal ,Leron ,People's Justice Center ,Veerashakti ,Raid ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்