×

1991-96 ஜெயலலிதா ஆட்சியை விட பழனிசாமி ஆட்சியில் தான் அதிக ஊழல் நடந்துள்ளது : மு.க.ஸ்டாலின் விளாசல்

சேலம் : தமிழக முதல்வர், அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பழைய பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ஓசூர் பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன், பர்கூர் மதியழகன், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தளி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமசந்திரன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இப்போது தமிழகத்தில் கமிஷன், கரெப்ஷன், கலெக்‌ஷன் என்ற குறிக்கோளுடன் ஊழல்நிறைந்த கொடிய ஆட்சி நடக்கிறது. இது எந்ததெந்த ஊழல் என்பது குறித்து கவர்னரிடம் தெளிவான பட்டியலை கொடுத்துள்ளோம். பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, அனைத்து டெண்டர்களையும் தனது சம்மந்திக்கும், அவரது சம்மந்திக்கும் கொடுத்துள்ளார். இது குறித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் சென்று அதற்கு தடைவாங்கினார் பழனிசாமி. அதனால் தான் தற்போது அவர் முதல்வராக இருக்கிறார். இல்லாவிட்டால் சிறையில் இருந்திருப்பாரதுணைமுதல்வர் ஓபிஎஸ் ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளார். அவர் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு டாலர் கணக்கில் கோடிகோடியாக லஞ்சம் வாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை ஊழல் ஆட்சிதுறை அமைச்சர் என்றே சொல்ல வேண்டும். எல்இடி பல்பு வாங்கியதில் கூட, கோடிகோடியாக கொள்ளை அடித்துள்ளார். வெளிப்படையாக வேலுமணி ஊழல் செய்தால், சைலண்டாக பல கோடி அடித்துள்ளார் மின்துறை அமைச்சர் தங்கமணி. வாக்கி டாக்கியில் ஜெயக்குமார், குட்காவில் விஜயபாஸ்கர், கொரோனா காலத்தில் அரிசி வாங்கியதில் காமராஜ் என்று அனைவரும் ஊழலில் திளைத்துள்ளனர். ஊழலுக்காகவே நடத்தப்படுவது தான் அதிமுக ஆட்சி.ஆனால் பழனிசாமி, வெளிப்படையாக நிர்வாகம் நடத்துவதாக அப்பட்டமான பொய் சொல்கிறார். இதை நான் சொல்லவில்லை. நடுநிலையான அறப்போர் இயக்கம் சொல்கிறது. இது போதாது என்று ஆட்சி முடியப்போகும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட2ஆயிரம் முதல் 3ஆயிரம் கோடிவரை ஊழல் செய்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் முதல், அமைச்சர்கள் வரையிலான ஊழல் புகார்களை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்படும்.ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது. அப்படி அவர் வெற்றி பெற்றால் பிஜேபி எம்எல்ஏவாக மாறிவிடுவார். இதை அனைவரும் உணர்ந்து நமது வேட்பாளர்களுக்கு பெரும் வெற்றியை தேடித்தர வேண்டும். நேற்று வெளியான கருத்து கணிப்புகள் கூட, நமது வெற்றியை உறுதி செய்துள்ளது. மக்களின் எழுச்சியும், ஆதரவும் 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெறும் என்பதை உறுதியாக உணர்த்துகிறது. எனவே கேடு கெட்ட ஆட்சிக்கு பாடம் புகட்ட, வரப்போகும் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். மோடிக்கு கைகட்டி நிற்கும் இவர்களை அகற்ற வேண்டும். காவிரிநீர் உரிமை, நீட்தேர்வு ரத்து, ஜிஎஸ்டியால் பாதிப்பு, தமிழகத்திற்கு எய்ம்ஸ், போதியநிதி போன்றவற்றை பெறுவதற்கு நாம் உறுதியேற்க வேண்டும்.பழனிசாமி ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். புதியதொழில் தொடங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்,மின்கட்டணம், பால்விலையேற்றத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் திமுகவின் ேதர்தல் அறிக்ைக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறந்து செயல்படுத்த 15ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு, சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனித்துறை, கரும்புடன்னுக்கு 4ஆயிரம், இயற்ைக வேளாண்மைக்கு தனிப்பிரிவு என்று மாநில அளவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம். கிருஷ்ணகிரியை பொறுத்தவரை ராயக்கோட்டையில் குளிர்பதனகிடங்கு, ஓசூர் அரசு மருத்துவமனை தரம் உயர்வு, போச்சம்பள்ளியில் கனிம ஏற்றுமதி நிறுவனம், பர்கூரில் ஜவுளிப்பூங்கா, கிருஷ்ணகிரியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம். எனவே ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல் சுயமரியாதை, தன்மானத்தோடு தமிழகம் விளங்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்து மாற்றத்தை உருவாக்குங்கள்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்….

The post 1991-96 ஜெயலலிதா ஆட்சியை விட பழனிசாமி ஆட்சியில் தான் அதிக ஊழல் நடந்துள்ளது : மு.க.ஸ்டாலின் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Palanisamy ,Jayalalithah ,G.K. Stalin Vlasal ,Salem ,Chief Minister of Tamil Nadu ,Jayalalitha'a ,
× RELATED பழனிசாமி தலைமையில் 9-வது தேர்தல் தோல்வி