×

மக்களின் விருப்பத்தைத் தாண்டி வன்முறை ஒரு போதும் வெற்றி பெறாது… ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை குறித்து கனடா பிரதமர் கருத்து!!

டொரண்டோ :அமெரிக்காவில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து 1000த்திற்கும் மேற்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்தது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடும் பாதுகாப்பு மிகுந்த வெள்ளை மாளிகையையும் பல ஆயிரம் பேர் முற்றுகையிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோபைடன் வருகிற 20ம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.எல்க்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுவில், பைடன் வென்றதற்கான வெற்றி உறுதி சான்றை வழங்க நேற்று அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, இந்த வன்முறை வெடித்துள்ளது. தேர்தல்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி டிரம்ப் ஆதரவாளர்கள் பல ஆயிரம் பேர் திடீரென வீதிகளில் குவிந்தனர்.வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு படையெடுத்த அவர்கள், டிரம்புக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.அப்போது அவர்களுக்கும் அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.கடும் பாதுகாப்பை மீறி ட்ரம்ப் ஆதரவாளர்கள் பல ஆயிரம் பேர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர்.அப்போது அதன் கதவுகள் உடைக்கப்பட்டன. கட்டிடங்கள் பெயர்க்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. சிலர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து டிரம்பிற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். அங்கிருந்த எம்பிக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். போராட்டக்காரர்களை வெளியேற்ற போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் இறந்த நிலையில் 3 பேர் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிடம் பூட்டப்பட்டது.போராட்டத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாஷிங்டனைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்ஜலிஸிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட் இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,’அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை கனடா மக்களிடத்தில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் விருப்பத்தைத் தாண்டி வன்முறை ஒரு போதும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்….

The post மக்களின் விருப்பத்தைத் தாண்டி வன்முறை ஒரு போதும் வெற்றி பெறாது… ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை குறித்து கனடா பிரதமர் கருத்து!! appeared first on Dinakaran.

Tags : Canada ,PM ,Trump ,Justin Trudeau ,United States ,US ,President ,Dinakaran ,
× RELATED 20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான...