×

ஆவணங்களை தாக்கல் செய்வதில் அலட்சியம் தமிழகத்தில் எளிதில் உடைபடுகிறது குண்டர் சட்டம்: 2 மாதங்களில் வெளி வரும் குற்றவாளிகள்

நாகர்கோவில்:  தமிழகத்தில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை செல்லும் ரவுடிகள் எளிதில் வெளி வந்து விடுகிறார்கள். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், சமூக விரோதிகளை ஒடுக்கவும், கள்ளச்சாராயம், பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகள், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்களை கட்டுப்படுத்தும் வகையில், 1982 ல் தமிழக அரசால் இயற்றப்பட்டது குண்டர் தடுப்புச் சட்டம். இதை தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம் என்பார்கள். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபரை, 12 மாதங்கள் வரை தொடர்ச்சியாக சிறையில் அடைக்க முடியும். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவருக்கு எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை என்பதால், கைது செய்யப்பட்டவர் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட நிர்வாக விசாரணைக் குழுவை மட்டுமே அணுக முடியும். கைதுக்கு எதிரான முறையீடு நிர்வாக விசாரணைக்குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டால் பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

இவ்வாறு பல கெடுபிடி நடவடிக்கைகளை கொண்ட குண்டர் சட்டம், சமீப காலமாக குற்றவாளிகளால் எளிதில் உடைக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் 2 மாதங்கள், 3 மாதங்களில் வெளி வந்து விடுகிறார்கள். இவர்களின் கைதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட குழு முன், காவல்துறை தாக்கல் செய்வதில்லை என்பதும் கைதாகிற நபர் வெளியே வருவதற்கான வாய்ப்பாக அமைகிறது.
ரவுடிகள், சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து, அதை உறுதிப்படுத்த போலீசார் சேகரிக்கும் ஆவணங்கள் தான் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இது பற்றிய ஒப்புதலுக்காக அனைத்தையும் விளக்கி பக்கம், பக்கமாக எழுதி, அதை கலெக்டரின் கவனத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற  வேண்டும். கிட்டத்தட்ட ஒரு நபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்காக போலீசார் 20 நாட்கள் வரை தொடர் முயற்சி எடுக்க வேண்டும். அந்த இடைப்பட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளி, நீதிமன்றத்தில் ஜாமீன் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குண்டர் சட்ட கைது நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே ரவுடிகள் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 387 ன் கீழ் வழக்கு பதிவு செய்வது உண்டு. ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு குறைந்த பட்சம் 5 ஆயிரம் வரை காவல்துறை செலவழிக்கிறது.

சிலரின் வழக்குகளில் இது 10 ஆயிரத்தை தொடும். இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும், குண்டர் சட்டத்தை எளிதில் உடைத்து விட்டு சம்பந்தப்பட்ட சிலர் 2 மாதங்களில் ஜாமீனில் வந்து விடுகிறார்கள். போலீசார் தயாரிக்கும் ஆவணங்கள் சில, குழுவின் விசாரணை முன் தோற்று போகிறது. குழுவில் ஜாமீன் கிடைக்கா விட்டால், நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் போலீசார் சேகரிக்கும் ஆவணங்கள் சில போலியானவையாக அங்கு சித்தரிக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். தண்டனை கடுமையாகும் போது தான் தவறுகள் குறையும். அந்த தண்டனை பற்றிய பயமே இல்லை என்பதற்கு முக்கிய உதாரணம் குண்டர் சட்டம் தான். எனவே காவல்துறை குற்றவாளிகள் வெளியே வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில்,  ரவுடிகள், குற்றவாளிகள் ஜாமீனில் வந்து தொடர்ந்து குற்ற நடவடிக்கையில்  ஈடுபடும் போது அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. இதனாலேயே அதிகளவில் குற்றங்கள் பெருகி உள்ளன. பின்னர் திடீரென ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறைக்கு கொண்டு செல்லும் போது, உடைபடுகிறது என்றனர்.

திருட்டு சி.டி.யும் சேர்ந்தது
2004ம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் செய்து திருட்டு வீடியோ, சி.டி குற்றம் ஆகியவையும், 2006 ல்  மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு ஆகியவையும் இணைக்கப்பட்டன. மாநகரங்களில்  காவல் துறை ஆணையரும், மாவட்டங்களில் கலெக்டரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள். மாவட்டங்களை பொறுத்தவரை எஸ்.பி.யின் பரிந்துரையின் பேரில் இந்த சட்டத்தின் கீழ், நபர்களை கைது செய்ய கலெக்டர் உத்தரவிடுவார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...