×

நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில் முப்படை அணிவகுப்பு ஒத்திகை: உழைப்பாளர் சிலை அருகே நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தீவிரம்

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் முப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மெரினா உழைப்பாளர் சிலை அருகே தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. நாட்டின் 74வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் நடைபெறும் குடியரசு தின விழா என்பதால், தமிழ்நாடு அரசு வாகன அணிவகுப்புடன் பெரிய அளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை இணைந்து செய்து வருகின்றன. வழக்கமாக மெரினா காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால் மெரினா காந்தி சிலை அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடு பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர் தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த வாகன அணிவகுப்புகளும் நடைபெற உள்ளது. இதனால் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை மெரினா காந்தி சிலையில் இருந்து போர் நினைவு சின்னம் வரை நடந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப் வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரின் வாகன ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதல்வர் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் காவல்துறை அதிகாரிகள் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இந்த ஒத்திகையால் மெரினா காமராஜர் சாலையில் நேற்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகை நாளை மற்றும் 24ம் தேதிகளிலும் நடக்கிறது….

The post நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில் முப்படை அணிவகுப்பு ஒத்திகை: உழைப்பாளர் சிலை அருகே நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tri-Army ,Kamaraj Road ,74th Republic Day ,Statue ,CHENNAI ,Republic Day ,Marina Kamarajar Road ,Dinakaran ,
× RELATED ஆயுதப் படைகளின் விண்வௌி தேவைகளை...