×

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை: பொன்பாடி சோதனைச்சாவடியில் ஏடிஜிபி அருண் சோதனை

சென்னை: தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் சப்ளை ஏடிஜிபி அருண் தெரிவித்தார். முன்னதாக ஆந்திர எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் அவர் சோதனையிட்டார். பொது வினியோக திட்டத்தில் இலவசமாக வழங்கப்படும்  அரிசியை கடத்துவதை தடுக்க தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (சிவில் சப்ளை சிஐடி) போலீசார் அந்தந்த மாவட்ட போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆந்திர மாநிலத்திற்கு இலவச அரிசியை கடத்துவதை  தடுப்பதற்காக மாநில எல்லையில் இருக்கக்கூடிய  சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று தமிழக -ஆந்திர எல்லை பகுதியான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு  ஏடிஜிபி அருண் நேற்று காலையில் திடீர் ஆய்வு செய்தார். ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தி செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும், சோதனைச் சாவடியில் சேதமடைந்த கண்காணிப்பு கேமராக்களை  உடனடியாக சரி செய்ய வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையே சென்று வரும் வாகனங்களின் பதிவு எண்களை  முறையாக பதிவு செய்ய வேண்டும் என போலீசாரிடம்  தெரிவித்தார்.மேலும் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது முழுவதுமாக தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஏடிஜிபி அருண் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது  உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி நாகராஜன் உடனிருந்தார். முன்னதாக, திருவள்ளூரில் போலீஸ் அதிகாரிகளுடன் அரிசி கடத்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்படி விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீதும், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, 19.12.2022 முதல் 25.12.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ,12,29,240 மதிப்புள்ள 2017 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 894 லிட்டர், துவரம் பருப்பு 1045 கிலோ, 24 எரிவாயு உருளை ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 82 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 225 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை: பொன்பாடி சோதனைச்சாவடியில் ஏடிஜிபி அருண் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,ADGP ,Arun ,Ponpadi ,Chennai ,ADGP Arun ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...