×

மாதவரம் கனரக வாகன பார்க்கிங் பகுதியில் வெடி பொருட்களுடன் நிறுத்தப்பட்ட 75 கன்டெய்னர் லாரிகள் அகற்றம்: போலீசார் நடவடிக்கை

சென்னை: மாதவரம், மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சிஎம்டிஏ கனரக வாகன நிறுத்த மையம் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாக்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வெடி பொருட்களை கப்பல் மூலம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கன்டெய்னர் லாரிகளில் கொண்டு வந்து மஞ்சம்பாக்கம் கனரக வாகன நிறுத்த மையத்தில் விதிமுறைகளை மீறி, பாதுகாப்பு ஏதுமின்றி நிறுத்தியிருப்பதாக மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணலி காவல் சரக உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர், குற்றப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் க்யூ பிராஞ்ச் போலீசார் அங்குள்ள லாரி நிறுத்த மையத்தில் விசாரணை நடத்தி சோதனை செய்தனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 75 கன்டெய்னர் பெட்டிகளில் வெடிபொருள் தயாரிக்க பயன்படும் சுமார் 600 டன் வெடி மூலப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இவை நாக்பூர், ஐதராபாத், ஓசூர், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கன்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்டு, மஞ்சம்பாக்கம் சிஎம்டிஏ கனரக வாகன நிறுத்த மையத்தில் வாரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு மஞ்சம்பாக்கம் லாரி நிறுத்த மையத்திலிருந்து கன்டெய்னர் லாரிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் திருவொற்றியூர் கடல் அருகே உள்ள லாரி நிறுத்தத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த வெடி மூலப்பொருள் நிரப்பப்பட்ட கன்டெய்னர் லாரிகள் இதற்கென தனிப்பாதை அமைத்து, தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புடன் கப்பலில் ஏற்றப்பட்டு, துறைமுகத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் துறைமுகத்தில் இருந்து நடுக்கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பற்ற முறையில் கன்டெய்னர் லாரிகளில் வெடி மூலப் பொருட்களை கொண்டு வந்து, மஞ்சம்பாக்கத்தில் வைத்திருந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          …

The post மாதவரம் கனரக வாகன பார்க்கிங் பகுதியில் வெடி பொருட்களுடன் நிறுத்தப்பட்ட 75 கன்டெய்னர் லாரிகள் அகற்றம்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,CHENNAI ,Madhavaram, Manjambakkam 200 Feet Road ,CMDA Heavy Vehicle Parking Center ,Dinakaran ,
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்