×

தடுப்பணை மதகுகளில் கசிவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்-பொதுமக்கள், விவசாயிகள் வேதனை

கடலூர் :  கடலூர் கெடிலம் ஆற்றில், திருவந்திபுரம் தடுப்பணையில் உள்ள மதகுகளில் கசிவு காரணமாக தற்போது தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, வெள்ளாறு, மணிமுக்தாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் வீராணம், பெருமாள் உள்ளிட்ட ஏரி, குளம் என நீர்நிலைகள் நிறைந்துள்ளது. தென் பெண்ணையாற்றில், எனதிரிமங்கலம் பகுதியில் கடந்த ஆண்டு ரூ. 25 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் தற்போது பெய்த மழையிலேயே சம்பந்தப்பட்ட தடுப்பணை ஒரு பகுதி உடைந்து சேமிக்கப்பட்ட மழைநீர் அனைத்தும் மீண்டும் கடலில் கலந்தது. இதனால் பண்ருட்டி பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தடுப்பணை கட்டிய ஓராண்டிலேயே இந்த அவல நிலை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடலூர் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் இதுபோன்று தடுப்பணை கட்டப்பட்டது. படுகை அணையாக இருந்த நிலையில் மதகுகள் அமைத்து தண்ணீர் சேமித்து வைக்கும் வகையில் தடுப்பு அணையாக தரம் உயர்த்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பில் திருவந்திபுரம் அணை கட்டப்பட்டது. ஆனால் தற்போது பெய்த மழையால் சம்பந்தப்பட்ட தடுப்பணையில், தண்ணீர் தேங்கிய நிலையில் தற்போது மதகுகள் சரியில்லாமல் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தேங்கிய மழை நீர் அனைத்தும் கசிவில் வெளியேறி கடலூர் பகுதி வழியாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இதுபோன்று தடுப்பணைகள் உடைப்பு ஏற்படுவதும், மதகுகள் சரியில்லாமல் கசிவு ஏற்பட்டு தேங்கிய மழை நீர் அனைத்தும் வெளியேற்றம் கொண்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதி மக்கள், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் தங்கள் பகுதியில் மழைநீர் தேக்கத்தால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என்று எண்ணிய நிலையில் மக்கள் வரிப்பணம் பாழாகும் நிலையில் தடுப்பணைகள் நிலைபாடு மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பொதுப்பணித்தறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு  ஆட்சியாளர்கள் இதனை தரமுடன் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்தனர். தற்போது கசிவால் வீணாகும் தண்ணீரை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்….

The post தடுப்பணை மதகுகளில் கசிவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்-பொதுமக்கள், விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Thiruvanthipuram ,Cuddalore Kedilam river ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்