×

 நீர் நிலைகளில் கழிவு நீர் கொட்டினால் லாரிகளின் உரிமம் ரத்து: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

சென்னை: ஏரி, குளம், குட்டை மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக கழிவு நீரை கொட்டினால், லாரிகளின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனை கூட்டம்  குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின், 2வது மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.  பின்னர், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நிருபர்களிடம் கூறுகையில்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் செப்டிக் டேங்குகளில் இருந்து வெளியேறப்படும் கழிவுநீர்களை டேங்கர் லாரிகள் மூலம், எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு நீர் நிலைகள், பொதுஇடங்களில் சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கொட்டுகின்றனர். இதனால், இந்த 2 மாவட்டங்களில் உள்ள டேங்கர் லாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவுநீர் கொண்டு செல்லும் டேங்கர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தி கண்காணிக்கப்படும். ஆன்லைன் மூலம் அதன் நடவடிக்கை கண்காணிக்கப்படும்.அதேபோல, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்படும். அதேபோல, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஒரு பறக்கும் படை அமைத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும். டேங்கர் லாரி மூலம் கழிவுநீரை சட்டவிரோதமாக ஏரிகள், நீர் நிலைகளில் கலந்தால், அந்த லாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். ஒரு சிலர் இதுபோன்று செய்து வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகிறதா என்பதை துறையின் அதிகாரிகள் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். குப்பைகளில் இருந்து உரம், மின்சாரம் பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post  நீர் நிலைகளில் கழிவு நீர் கொட்டினால் லாரிகளின் உரிமம் ரத்து: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Maianathan ,Chennai ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்