×

சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட்டில் ஆய்வு; தொழில் முனைவோருக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே சாத்தாங்காட்டில் சிஎம்டிஏவினால் கட்டப்பட்ட இரும்பு, எஃகு மார்க்கெட் வளாகத்தை இன்று காலை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இவ்வளாகத்தில் தொழில் முனைவோருக்கு உகந்த வகையில் உரிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.சென்னை பாரிமுனையில் நீண்ட காலமாக இயங்கி வரும் இரும்பு மார்க்கெட்டினால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு, திருவொற்றியூர் அருகே சாத்தாங்காடு பகுதியில், கடந்த 1991ம் ஆண்டு சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் 203 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பில் இரும்பு, எஃகு மார்க்கெட் அமைக்கப்பட்டது. இங்கு இரும்பு, எஃகு தொழில் செய்பவர்களுக்கு வசதியாக 850 மனை பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அதில் 719 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இரும்பு, எஃகு மார்க்கெட் கடந்த 2007ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், இங்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தை கூறி ஒதுக்கீடு பெற்ற இரும்பு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த இரும்பு, எஃகு மார்க்கெட்டை முழுமையாக செயல்படுத்த சிஎம்டிஏ அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதன்படி, இன்று காலை சாத்தாங்காடு இரும்பு, எஃகு மார்க்கெட் வளாகத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.மேலும் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: சாத்தாங்காட்டில் இரும்பு மார்க்கெட் அமைக்கப்பட்டதில் வியாபாரிகளுக்கும், பெருநகர வளர்ச்சி முன்னேற்றத்துக்கு உதவியாக அமைந்தது. இங்கு 131 மனைகளை ஒதுக்கீடு செய்யவும், 184 மனைகளை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கவும், அதன்பிறகும் வியாபாரிகள் பதிவு செய்யவில்லை என்றால், அந்த மனைகளை பொது ஏலத்தில் விடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த இரும்பு மார்க்கெட்டை முழுமையாக செயல்படுத்த, இங்கு மழைநீர் கால்வாய், மருத்துவ வசதி, வாகனங்கள் பழுதுபார்ப்பு மையம், எலக்ட்ரானிக் எடைமேடை, துணை மின்நிலையம், உணவகம், 52 இடங்களில் சிசிடிவி காமிரா உள்பட பல்வேறு அனைத்து வசதிகளுடன் பிரமாண்ட நுழைவுவாயில் முகப்பு அமைக்க திட்ட வரவு தயாரிக்கப்படுகிறது. வரும் 3 ஆண்டுகளுக்குள் சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட் மிகப்பெரிய வணிக மையமாகவும், தொழில் முனைவோருக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த ஆய்வில் எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், சிஎம்டிஏ செயலாளர் அன்சுல்மிஸ்ரா, அதிகாரிகள் லட்சுமி, பரிதா பானு, மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், பகுதி செயலாளர் வை.ம.அருள் தாசன், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post சாத்தாங்காடு இரும்பு மார்க்கெட்டில் ஆய்வு; தொழில் முனைவோருக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Satangadu Iron Market ,Minister ,SeagarBabu ,Thiruvottriyur ,Sekarbabu ,CMTAV ,Chattangad ,Thiruvottriore ,Satanagar Iron Market ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...