×

இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை ஆக்குவது என்னுடைய லட்சியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சேத்துப்பட்டு சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை ஆக்குவதே என்னுடைய லட்சியம்’’ என்று கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்னுடைய தமிழ் ஆசிரியராக இருந்த ஜெயராமன் என்னை வாழ்த்தி பேசுகிறபோது, உன்னை மாணவனாகப் பெற்றதில் பெருமை அடைகிறோம் என்றார். உங்களிடத்திலே நான் தமிழ் பாடத்தை கற்க கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு பெருமை அடைகிறேன். சாதாரணமாக நீங்கள் சொல்லித் தரவில்லை. அடித்து, அடித்து சொல்லி கொடுத்தீர்கள். அதுதான் எனக்குப் பெருமை. சி.எம்-ஆக இங்கே வரவில்லை. நான் ஒரு ஸ்டூடண்ட்டாகத்தான், உங்களுடைய பழைய பிரண்ட் ஆகத்தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.  நாம் படித்த சேத்துப்பட்டு ஸ்கூலுக்கு போக போகிறோம் என்று நேற்று முன்தினம் இரவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால், அந்த மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை. ஒரு பள்ளியில் இருந்து எத்தனையோ டாக்டர்கள் வந்திருப்பார்கள். பொறியாளர்கள் வந்திருப்பார்கள். வழக்கறிஞர்கள் வந்திருப்பார்கள். ஆனால் முதலமைச்சரை உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்றால், அதில் எனக்கும் பெருமை தான்.இந்த பள்ளியில் சேருகிறபோது என்னுடைய இரண்டு சகோதரர்கள் படிக்கிறார்களே எனக்கு அட்மிஷன் சுலபமாக கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நுழைவுத் தேர்வு இருக்கிறது. நான் பரீட்சையில் தேறவில்லை. பெயிலாகிவிட்டேன். சேர்க்க முடியாது என்று சொன்னார்கள். அப்போது சென்னையில் யார் மேயர் என்றால் குசேலர். நீங்கள் சிபாரிசு செய்யுங்கள், நீங்கள் மேயர், அதனால் இந்த பள்ளியில் சிபாரிசு செய்தால் சீட் கிடைக்கும் என்று முரசொலி மாறன் அழைத்துக் கொண்டு வருகிறார். செவர்லெட் காரில் நான், மேயர், முரசொலி மாறன் வருகிறோம். அந்த காரை இந்த ஸ்கூலில் ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் தான் அனுமதிப்பார்கள். உள்ளே காரே வரமுடியாது. ஆனால் மேயர் காரில் உள்ளே வந்தேன். அப்போது சௌரிராயன் தலைமையாசிரியராக இருக்கிறார். அவருடைய அறையின் பக்கத்தில் கார் நிற்கிறது. மேயரை அவர் வரவேற்று, என்னையும் அழைத்துக் கொண்டு போகிறார். எனக்கு அதற்குப்பிறகு சீட் கிடைக்கிறது. பின்னர் இந்த பள்ளியில் படித்து இன்றைக்கு இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வரக்கூடிய சூழ்நிலையை நினைத்து நீங்கள் எப்படி பெருமைப்படுகிறீர்களோ, அதைவிட அதிகமான அளவுக்கு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.6ம் வகுப்பில் முதன்முதலில் சேர்ந்தேன். போனமுறை வந்திருந்தபோது அந்த அறைக்கு அழைத்துக் கொண்டு சென்று அங்கே இருக்கக்கூடிய நாற்காலியில் உட்கார வைத்து நம்முடைய இப்போது இருக்கின்ற தலைமையாசிரியர் அழகு பார்த்தார். அதற்குப் பிறகு 7ம் வகுப்பையும் பார்த்தேன். இப்போது அந்த இடமெல்லாம் கிண்டர் கார்டனாக மாறியிருக்கிறது. ஓரளவுக்குத் தான் மாறியிருக்கிறதே தவிர மற்றபடி முன்னால் இருந்தபடி தான் பராமரித்துக் கொண்டு வருகிறீர்கள். என் மனசுக்குள்ளே என் வகுப்பறை எப்படி இருக்கிறதோ அதுபோல தான் இப்போதும் இருக்கிறது. இங்கே பழைய நண்பர்களையெல்லாம் பார்க்கிறேன். நம்முடைய முன்னாள் தமிழாசிரியர் ஜெயராமன்  மிகப் பெருமையோடு அனைத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.அப்போது எல்லாம் இந்தப் பள்ளியின் சார்பில் சில நிகழ்ச்சிகள் நடத்துவதுண்டு. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துவதுண்டு. அப்போது நன்கொடை வசூல் செய்வார்கள். என்னிடத்தில் தான் புக்கை கொடுத்துவிடுவார்கள். அப்போது பள்ளிக்கு எனக்கு லீவு கிடைத்துவிடும். அந்த நன்கொடை சீட் எடுத்துக் கொண்டு பல பெரிய தொழிலதிபர்கள், குறிப்பாக அன்றைக்கு பிரபலமாக சினிமாவில் மின்னிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஆகியோரிடத்தில் சென்று நன்கொடை வாங்கி கொடுத்திருக்கிறேன். அதனால் அதற்காகவே எனக்கு லீவு கிடைக்கும் என்பதற்காக வசூலில் அதிகம் ஈடுபடுவதுண்டு.இப்படிப்பட்ட நிலையில், பல அனுபவங்கள் அதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். முன்னாள் மாணவர்கள் இணைந்து பல சேவைகள் இந்தப் பள்ளிக்கு செய்து கொண்டிருக்கக்கூடிய அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூட முன்னாள் மாணவர் அழகோடு எடுத்துச் சொன்னார். இந்தப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை எல்லாம் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட பரந்த உள்ளத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதேபோல ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தப் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு உதவிகளை செய்யவேண்டும். இதேபோல ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன். பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய இருக்கிறோம். இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அதையும் புரிந்து கொண்டு மக்களும் சேர்ந்தால் தான் அதை நிறைவேற்ற முடியும். வெற்றிபெற முடியும். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் 19ம் தேதி தொடங்குவதற்கு முன்னதாகவே நான் படித்த பள்ளியிலே, எனது பள்ளியிலே முன்னெடுப்பாக நடந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். தமிழகத்தை, இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்குவது என்னுடைய லட்சியம். அது உங்களுக்குத் தெரியும். இந்த ஆட்சி பொறுப்பேற்று, முதலமைச்சராகப் பொறுப்பேற்று, எத்தனையோ அரசு நிகழ்ச்சிகள், எத்தனையோ பொது நிகழ்ச்சிகள், எத்தனையோ கட்சி நிகழ்ச்சிகள் என்று எத்தனை நிகழ்ச்சிக்கு போனாலும், இந்த நிகழ்ச்சிக்கு எந்த நிகழ்ச்சியும் ஈடாகாது. இதுதான் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.* ‘பள்ளி தோழர்களை சந்தித்து மகிழ்ந்தேன்’முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், ‘‘பள்ளிக் காலத்தை அசைபோடாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? நேற்று என்னுடைய பள்ளிக்குச் சென்று தோழர்களைச் சந்தித்து மகிழ்ந்தேன். சில மணித்துளிகளில் பல ஆண்டு நினைவுகள் உருண்டோடி நெஞ்சை நனைத்தது. நண்பர்கள் ஜெயராமன் அய்யா 29சி பேருந்து என ஞாபகங்களின் இதமான தாலாட்டு’’ என கூறியுள்ளார்….

The post இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை ஆக்குவது என்னுடைய லட்சியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,G.K. Stalin ,Chennai ,Alumni Sangha ,Chetupatu Chennai Christian College ,secondary ,school ,Chief of India ,CM ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...