×

பதவியல்ல பொறுப்பு

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அதே போன்று காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  அதுபோன்ற விமர்சனங்களை செயலால் எதிர்கொள்வேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக பதிலடி கொடுத்துள்ளார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் திமுக வெற்றியை தொடர்ந்து இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், ஆட்சி பொறுப்பில் திமுக இல்லாத நிலையிலும் களத்தில் இறங்கி பல்வேறு மக்கள் பணிகளை செய்தார். மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரி ஏரி, குளங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். ஊரடங்கு காலத்தில் ஒன்றிய அரசும், அப்போதைய மாநில அரசும் விழி பிதுங்கி நின்ற நேரத்தில் இளைஞரணி சார்பில் களப்பணிகளில் இறங்கினார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மருந்து, உணவு பொருட்களை அவர்களது இல்லத்துக்கே கொண்டு சேர்த்தார். அதுமட்டுமா, நீட் எதிர்ப்பு போராட்டம், குடியுரிமை திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் இளைஞர்களை முன்னின்று வழிநடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். குறுகிய காலத்தில் கட்சியில் பம்பரமாய் சுழன்று பணியாற்றி மூத்த தலைவர்களின் பாராட்டையும், நன்மதிப்பையும், ஆசியையும் பெற்றார். மேலும் கட்சி தொண்டர்களின் மனங்களை வென்றார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உள்பட தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நேரத்தில் சூறாவளி பிரசாரம் செய்தார். தனது தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து அவர்கள் இதயத்தில் இடம்பிடித்தார். இப்படி துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் பணியாற்றி அமைச்சர் பதவியை தன் திறமையால் வென்றெடுத்துள்ள உதயநிதி, தனக்கு வழங்கப்பட்டுள்ளது பதவியல்ல பொறுப்பு என்று பணிவுடன் கூறியுள்ளார். அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் செயலால் எதிர்கொள்வேன். செயல்பாடுகளின் மூலம் மக்களின் மனங்களை வெல்வேன் என்று நம்பிக்கையோடு உதயநிதி தெரிவித்துள்ளார். இளம்வயதில் சுயநலமின்றி நாட்டுக்காக உழைக்க  முன்வந்துள்ள ஒருவரை குறுகிய வட்டத்தில் வைத்து பார்க்க கூடாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார். அவரை போன்று அரசியலில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற கனவும், முயற்சியும் இளைஞர்களிடம் ஏற்படும். இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. மக்கள் சேவையே எனது முழுப்பணி என்று கூறியுள்ளார். புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மூன்று அரசு செயலாளர்களுடன் இணைந்து செயலாற்ற இருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளார். அமைச்சர்கள் வரிசையில் 10வது இடம் கொடுக்கப்பட்டுள்ள அவர் தனது செம்மையான பணிகளால் விரைவில் மக்களிடமும் முதலிடம் பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை….

The post பதவியல்ல பொறுப்பு appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Minister ,Youth Welfare and Sports Development ,Special Project Implementation Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...