×

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி..!!

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிப்பது தேர்தல் ரகசிய தன்மையினை பாதிக்கும் என வாதிட்டார். அரசு சாசனப்படி தேர்தல் வாக்களித்தலில் அனைவரும் சமமாக கருத வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என தெரிவித்த அவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும், வாக்காளர் யார் என்பதை வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தான் அடையாளம் காணமுடியும் என்றும் குறிப்பிட்டார். முதியோருக்கும், மாற்றுத்திறனாளிக்கும் தபால் வாக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். புதிய நடைமுறையால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. அச்சமயம், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், தவறான யூகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தபால் வாக்கு என்பது விருப்ப தேர்வு தான் என்று வாதிட்டார். இதேபோல் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதித்தோருக்கு தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், இது சம்பந்தமாக மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்தது மொத்தமானது; மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க அவசியம் இல்லை எனவும் வாதிடப்பட்டது. தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் எந்தவொரு கருத்தும் இல்லை என தெரிவித்து 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….

The post மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்